திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதைகள் போன்ற உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதலமைச்சர் ஏற்கனவே மழை சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக வந்து பார்வையிட்டார். அதுமட்டுமின்றி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அமைச்சர்கள் குழு அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் முதலமைச்சர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அறிவித்தார். மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கேட்டறிந்தார். முதலமைச்சர் அறிவித்த நிவாரணம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.




திருவாரூர் மாவட்டத்தில் 24 அரிசி ஆலை முகவர்கள் உள்ளனர். அவர்களை அழைத்து உடனடியாக கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து நெல்லையும் விரைவில் அரைத்து அரிசியாக தரவேண்டுமென கூறியுள்ளோம். அவர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அதனையும் பரிசீலிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றித் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 39 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இருப்பில் உள்ளது. அதனை உடனடியாக அரிசி அரவை ஆலை மூலமாக அரவை செய்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதேபோன்று மாதம்தோறும் 61 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் அரவை செய்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது அவற்றை உரிய முறையில் செய்து தரவேண்டும் என அரவை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது வேறு மாநிலத்தவருக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் அந்த கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயோ மெட்ரிக் முறையை பொறுத்தவரை மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம். மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. அதனை கடந்த அரசு தமிழ்நாட்டில் ஏற்றுக்கொண்டது. அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் முறையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 97% மக்கள் பயன்படுத்துகிறார்கள். காய்கறி விலை உயர்வின் காரணமாக ரேஷன் கடைகளில் காய்கறி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஏற்கனவே சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் காய்கறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மற்ற மாவட்டங்களில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட மூன்று லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.




திருவாரூர் மாவட்டத்தில் இந்த வாரம் 2013 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாகவும், ஏற்கனவே 2000 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாகவும், மேலும் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் தரப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறான தகவல். இது வதந்தி. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 78 சதவீதம் மட்டும்தான். தற்போது ஒமைக்ரான் என்கிற புதிய வைரஸ் பரவி வருகிறது. அதைப்பற்றி பல மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.