தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகளில் முனைப்பு காட்ட முடிவு செய்துள்ளனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகளில் முனைப்பு காட்ட முடிவு செய்துள்ளனர்.

Continues below advertisement

மார்ச் மாதம் முதலே வெயில் தாக்கம் அதிகரிப்பு

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வந்தனர். ஏப்ரல் மற்றும் மே மாதம் தொடக்கத்தில் வெயில் சதம் அடித்தது. இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரமும் தொடங்கியதால் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. வயல்களில் புல், பூண்டுகள் கூட கருகி போய்விட்டன.

வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் பழச்சாறு கடைகளில் குவிந்தனர். மேலும் நுங்கு, இளநீர், தர்பூசணி, கிர்ணிப்பழம், வெள்ளரிப்பழம், கரும்புச்சாறு போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிட்டனர். 

பழங்கள் விற்பனை அதிகரிப்பு

குறிப்பாக பழங்கள் விற்பனை அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளரிப்பிஞ்சுகள் விற்பனையும் அமோகமாக நடந்தது.

மக்களின் தாகம் தீர்க்க பல்வேறு அரசியல் அமைப்புகள், தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல் ஆங்காங்கே அமைத்தனர். தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டது. மதிய வேளையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் முடங்கினர். சாலைகளில் கானல் நீர் தென்பட்டது.

பரவலாக பெய்ய ஆரம்பித்த கோடை மழை

இதற்கிடையில் இந்த மாதம் முதல்வாரத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம், அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, கும்பகோணம் என்று பரவலாக கோடை மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

வெப்பக்காற்றால் இரவில் தூக்கம் இல்லாமல் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை ஆறுதலை தந்தது.

கால்நடைகளுக்கு உணவு

இந்நிலையில் அவ்வபோது மழை சாரலாகவும், தூறலாகவும், சில பகுதிகளில் கனமழையாகவும் பெய்தது. இதனால் வயல்களில் புல், பூண்டுகள் லேசாக வளர தொடங்கி உள்ளது. இதனால் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் மாடுகள், ஆடுகளுக்கு உணவு கிடைத்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று 19ம் தேதி மாலை முதல் தஞ்சை நகரில் மிதமான மழை பெய்தது.  மலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. அந்த வகையில் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி, பூதலூர், வல்லம், குருங்குளம், மருங்குளம், வேங்கைராயன்குடிகாடு என பலபகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

வழக்கமாக மே 22ம் தேதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் தற்போது 3 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ளது. வரும் 30ம் தேதி கேரளா உட்பட பகுதிகளில் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு வயல்களை தயார் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று காலை முதல் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ளதால் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தினருடன் வந்து சென்றனர்.

நகர் பகுதியில் மாலையில் மிதமான மழை பெய்த நிலையில் பெரிய கோயிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. மழை நின்ற பின்னர் மீண்டும் அதிகரித்தது. இதேபோல் கல்லணை உட்பட தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா இடங்களிலும் மக்கள் மழைக்கு பின்னர் குவிந்தனர்.

Continues below advertisement