தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் இம்மாதம் முதல் மாதந்தோறும் 3வது சனிக்கிழமையன்று தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இனி வரும் வாரங்களிலும் இந்த மருத்துவ முகாம்களில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தொற்றா நோய்கள் கண்டறிதல்


பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை வழிகாட்டுதலின்படியும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படியும் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலமாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தொற்றா நோய்கள் கண்டறிதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.


தொற்றா நோய்கள் - மக்களை தேடி மருத்துவ கள அளவிலான செயலாக்க வழிமுறைகளின் படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குடியிருப்பு நல சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் நகர்ப்புறங்களில் உள்ள சுகாதார மையங்களில் பணியாளர்களைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் 3-வது சனிக்கிழமைகளில் அனைத்து மக்களையும் ஆய்வு செய்யும் பொருட்டு தொற்றா நோய்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




உயர் இரத்த அழுத்தம், நீரிழிவுநோய் சிகிச்சை


இதன்படி தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் பெரியார் நகரில் உள்ள முத்தமிழ் நகர் கார்டன் பகுதியில் பொதுநல சங்கமும் கரந்தை பகுதியில் டவுன் கரம்பை தனியார் பள்ளி வளாகத்தில் குடியிருப்போர் நல சங்கத்தின் மூலமும் மகர் நோன்பு சாவடி வி.பி.கோவில் தெரு அரசு தொடக்கப் பள்ளியில் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடனும் சீனிவாசபுரம் நாகம்மா சந்து ராமு மண்டபத்தில் அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தின் மூலமும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன இம்முகாம்களில் பங்கேற்றவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவுநோய்,மார்பக புற்றுநோய், கருப்பை வாய்புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிக்சை வழங்கப்பட்டது.


மேலும் மருத்துவ குழுவினர் சிறப்பு முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இரத்த அழுத்தத்தை 120-80 என்னும் சரியான அளவில் வைத்துக் கொள்ளுதல், இரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடிய உப்பு பொருட்களான அப்பளம், ஊறுகாய், கருவாடு, வத்தல் மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் உண்ணுதலை தவிர்த்தல்.


உணவு பழக்கம் பற்றி அறிவுறுத்தல்


அதிக கொழுப்பு சத்துக்கள் உள்ள உணவுகள் உண்ணுவதை தவிர்த்தல், மது பழக்கத்தை தவிர்த்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், நார்ச்சத்து இல்லாத மைதாவினால் தயாரிக்கப்படும் பரோட்டா போன்ற உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த காய்கறி கீரைகள் பழங்கள் உள்ளடங்கிய சத்தான உணவு உண்ணுதல் மூலம் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தல், தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்தல் முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் போன்ற நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடித்தால் சரியான இரத்த அழுத்த அளவு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை தக்க வைத்துக் கொள்ள முடியும்.


மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களினால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் தொடர்சிகிச்சையின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.


தொடர் சிகிச்சை அளித்தல்


கல்லுக்குளம் கரந்தை மகர்நோம்புச்சாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய நான்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஓராண்டில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தொற்றநோய் பிரிவுகளில் உயர் ரத்த அழுத்தம் 1,78,366 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதில் 32644 உறுதி செய்யப்பட்டது. நீரிழிவு நோய் 1,78,366 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


அதில் 20035 பேருக்கு உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது மேலும் மகளிருக்கு கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது இந்த சிறப்பு  சிறப்பு முகாம்களில் 389 நபர்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டதில் 57 நபர்கள் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக கண்டறியப்பட்டனர்


அதேபோல 389 நபர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 33 நீரிழிவு நோய் உள்ளவர்களாக கண்டறியப்பட்டனர் 108 மகளிர்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையும் 146 மகளிர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பு மருத்துவ முகாம்களுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி தலைமையிலான நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அ.சு.முத்துக்குமார், வ. சிவகாமசுந்தரி,இரா.மணிமேகலை, லெட்சுமணகுமார், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


இதேபோல தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாதந்தோறும் 3-வது சனிக்கிழமையன்று தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.