தஞ்சாவூர்: என்னாது இது... இரண்டும் ஒன்றா? இப்படி இருந்தா எப்படிங்க என்று தன் வேதனையை சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட தற்போது அதுதான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?
சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயில் டிக்கெட்டும், விமான பயண டிக்கெட்டும் ஒன்றாக இருப்பதாக எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்டிருக்கும் பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த பதிவு தற்போது பெரும் வைரலாகி வருகிறது. குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் மேற்கொள்ளலாம் என்பதால்தான் அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
தொலை தூரமாக இருந்தாலும் குறைந்த கட்டணம் என்பதுதான் ரயில் பயணத்தின் மவுசை அதிகரித்தது. ஆனால் விமான டிக்கெட்டுக்கு நிகராக ரயில் டிக்கெட்டும் இருப்பதாக எக்ஸ் தளத்தில் சுந்தரராஜன் என்பவர் போட்டுள்ள பதிவு இப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் தினமும் லட்சக்கணக்கானவர்கள் ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சாமானிய மக்களின் போக்குவரத்தில் முதலிடம் பிடிப்பது ரயில்கள்தான். பரவலாக அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சேவை ரயில் பயணம்தான். மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல குறைந்த டிக்கெட் கட்டணத்தில் பயணம் செய்ய ரயில்கள் வழிவகை செய்கின்றன.
அந்தவகையில் அவசர தேவைக்காக பயணம் செய்பவர்களுக்காகவே தட்கல் டிக்கெட் சேவையை இந்திய ரயில்வே துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த டிக்கெட் வேண்டும் என்பவர்கள் பயணம் செய்யும் ஒருநாளுக்கு முன்பாக காலை நேரத்தில் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு தேஜாஸ் ரயிலில் செல்ல பிரீமியம் தட்கல் டிக்கெட்டின் விலை ரூ. 2500 வரை இருக்கிறது என தன்னுடைய எக்ஸ் பதிவில் சுந்தரராஜன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் விமான டிக்கெட்டே ரூ.2200 தான் தொடங்குகிறது என பதிவிட்டுள்ளார். குறிப்பாக பயணம் செய்ய வேண்டிய அந்த நாளிலேயே கூட சென்னை- திருச்சி இடையிலான விமான சேவைக்கு ரூ.2500 முதல் ரூ.3000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் கிடைக்கின்றன என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தேஜாஸ் ரயிலில் எப்போதுமே டிக்கெட் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் தட்கல் டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கிறது. எனவே ஏர் இந்தியா நிறுவனம் சென்னை மற்றும் திருச்சி இடையே ஒரு நாளைக்கு 4 விமான சேவைகளை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ரயில்வே துறை கண் விழிக்க வேண்டிய நேரம் இது எனவும் அவர் கூறியுள்ளதுதான் ஹைலைட். தேஜாஸ் ரயில் டிக்கெட்டை விட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் விமான டிக்கெட் குறைவாக கிடைக்கிறது. ரயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் புக் செய்தால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும்.
ஆனால் அவசர தேவைக்காக எனும் போது ரயிலில் செல்ல நாம் தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம். இதில் இருக்கும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கு தான் சில சமயங்களில் அதிக கட்டணம் விதிக்கப்படுகிறது. அதனை குறிப்பிட்டு தான் அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். எது எப்படி இருந்தாலும் விமான பயணத்திற்கான கட்டணம் குறைவு என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளதுதான் குறிப்பிடத்தக்கது.