தஞ்சாவூர்: திருச்சியில் உள் இணைப்பு சாலை பணிகள் எப்போது தொடங்கும் என்று பொதுமக்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். தேர்தலுக்கு முன்பே இந்த பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Continues below advertisement

திருச்சியில் நீண்டநாளாக நிலுவையில் இருந்து வந்த உள் இணைப்பு சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னேற்றம் பெற்று வருகின்றன. நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், நகர வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்த திட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த சாலைப்பணிகளை உடன் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த உள் இணைப்பு சாலை திட்டம், திருச்சியின் முக்கிய சாலைகளுடன் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர மையப்பகுதிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மக்களை வெகுவாக பாதித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, வாகனங்கள் மாற்றுப்பாதை மூலம் செல்ல இந்த உள் இணைப்பு சாலை திட்டம் உதவும். இதனால் பயண நேரம் குறையும் என்பதுடன், எரிபொருள் செலவும் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Continues below advertisement

திட்டத்திற்காக தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நில அளவீடு, மதிப்பீடு மற்றும் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். பல நில உரிமையாளர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

சில பகுதிகளில் நில உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில இடங்களில் மதிப்பீடு மற்றும் ஆவண தொடர்பான செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பெரும்பாலான நிலங்கள் விரைவில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், நகரின் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். குறிப்பாக கனரக வாகனங்கள் மற்றும் நகரை கடந்து செல்லும் போக்குவரத்து, நகர மையத்தை தவிர்த்து செல்லும் வசதி கிடைக்கும். இதன் மூலம் விபத்து அபாயமும் குறையும் என்றனர்.

இந்த உள் இணைப்பு சாலை, எதிர்கால நகர விரிவாக்கத்திற்கும் ஆதரவாக அமையும். புதிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழில் வளாகங்களுக்கு சீரான இணைப்பு கிடைக்கும். நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது துணைபுரியும் என கூறப்படுகிறது. மொத்தத்தில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளதால், உள் இணைப்பு சாலை திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. திருச்சியின் நீண்டநாள் போக்குவரத்து சிக்கலுக்கு இது ஒரு நிலையான தீர்வாக அமையும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த உள் இணைப்பு சாலை திட்டத்தை தேர்தல் அறிவிப்பு முன்பே தொடங்கி விட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.