தஞ்சாவூர்: தைப்பட்டத்தை தவறவிடாமல் நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பது உத்தமம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை உன்னதமான ஆலோசனையை வழங்கி உள்ளது.
காவிரி பாசனப் பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறுவடைக்கு பின் மண்ணில் இருக்கும் ஈரம் மற்றும் காற்றில் உள்ள பனி ஈரப்பதத்தினை கொண்டு எந்தவித நில தயாரிப்பு இல்லாமல் நல்ல மகசூல் எடுக்கும் வாய்ப்பு தைப்பட்ட தரிசு நில உளுந்து சாகுபடியில் உள்ளது. எனவே தைப்பட்டத்தை தவறவிடாமல் உளுந்து, பச்சை பயிறு சாகுபடி செய்யுங்கள் என வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
நெல்லுக்குப் பின் பயறு வகை பயிர் சாகுபடியில் உற்பத்தி திறன் குறைவுக்கு பருவம் தவறி விதைத்தல், உற்பத்தி திறன் குறைந்த விதைகளை பயன்படுத்துதல் பயிர் எண்ணிக்கையை சரிவர பராமரிக்காதது, களை நிர்வாகத்தை கவனிக்காமல் விடுவது, பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தாமல் இருப்பது, பூக்கும் தருணம் மற்றும் காய்கள் வளர்ச்சி அடையும் தருணங்களில் வறட்சி நிலவுவது, சரியான தருணத்தில் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிந்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை காரணங்கள் ஆகும்.
எனவே புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்யவும், அதிக விளைச்சலைப் பெறவும் தகுந்த தொழில் நுட்பங்களை கையாள்வது அவசியம்.
சாகுபடி பருவம்: நெல் தரிசில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்குப் பிறகு மார்கழி மற்றும் தை மாதங்களில் பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சை பயிறு சாகுபடி செய்யலாம். இதற்கு உளுந்து ஆடுதுறை- 3, 5, 6, வம்பன்- 6, 8 சிறந்த ரகங்கள் ஆகும்.
பயிர் எண்ணிக்கை: பயிர் வகை சாகுபடியில் பயிர் எண்ணிக்கையை பராமரித்தால் பல மடங்கு மகசூல் கூடும். எனவே ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் விதைக்க வேண்டும். இதற்காக விதை நேர்த்தி செய்வது சிறப்பான ஒன்றாகும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி உயிர் பூஞ்சாணம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவும். இதன் மூலம் விதை வழியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம்..
நுண்ணுயிர் விதை நேர்த்தி: ஒரு ஏக்கருக்கு தேவையான விதைக்கு ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் நுண்ணுயிர் உடன் 500 மில்லி ஆறிய கஞ்சி கலந்து விதையுடன் சேர்த்து நன்கு பிசைந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும், பூஞ்சாண விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்திற்கு பிறகு விதைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு இதை செய்ய வேண்டும்.
ரைசோபியம் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் வேர் முடிச்சுகளில் காற்றில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
விதைப்பு: சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன் 3 முதல் 4 நாட்களில் காவிரி ஆற்றுப் பாசன பகுதியில் நெல் தரிசு உளுந்தை ஏக்கருக்கு 12 கிலோ என்கிற அளவில் மெழுகு பதத்தில் விதைப்பு செய்ய வேண்டும் மண்ணில் ஈரம் அதிகமாக இருப்பின் செயின் பொருத்திய அறுவடை இயந்திரமும் அல்லது மண் ஈரப்பதமாக இருந்தால் டயர் சக்கரம் பொருந்திய அறுவடை இயந்திரமும் பயன்படுத்தலாம்.
களை நிர்வாகம்: நெல் தரிசு பயறு வகை பயிர்களின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் 30 நாட்கள் வரை பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது. நெல் தரிசு பயிரில் விதைத்த 18 - 20 ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மில்லி (ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி அளவில்) தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகை களைகள், நெல் மறு தாம்பு பயிர் மற்றும் அறுவடையின் பொழுது விழுந்து முளைத்த நெல் நாற்றுக்கள் நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
பயறு வகை பயிர்களில் இலை வழி உரமிடல் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும் குறிப்பாக நெல் தரிசில் அடியுரம் இட முடியாத நிலையில் இலை வழி உரமாக தெளிப்பது விளைச்சல் அதிகரிப்பதற்கு காரணமாகிறது. காய்கள் அதிகம் பிடித்து விளைச்சல் 20% வரை அதிகரிக்கிறது.
ஏக்கருக்கு நாலு கிலோ டிஏபி உரத்தை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
பூக்கும் தருணத்தில் (விதைத்த 25ம் நாள்) மற்றும் 15 நாட்கள் கழித்து அதாவது காய்கள் பிடிக்கும் தருணத்தில் விதைத்த நாற்பதாம் நாள் மறுமுறையும் தெளிக்க வேண்டும்.
அறுவடை: எண்பது சதவீதத்திற்கு அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை தரைமட்டத்திற்கு அரிவாளால் அறுவடை செய்து கட்டி வைத்த பின்பு வெயிலில் காய வைத்து மணிகளை பிரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு தரைமட்டத்தில் வெட்டப்படுவதால் மண்ணில் இருக்கும் வேர்கள் மண்ணில் தங்கி மண்வளத்தை பெருக்கும்.