தஞ்சாவூர்: காவிரி நதிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். விவசாயிகளுக்கு உறுதுணையாக தேமுதிக எப்போதும் இருக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்து நெல் பயிர்கள் கருகுவதை கண்டு வேதனையடைந்து மாரடைப்பால் உயிரிழந்த விவசாயி ராஜ்குமார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எத்தனையோ முறை  விவசாயிகளுக்காக போராடியிருக்கோம். முல்லைப் பெரியாருக்காக போராடியிருக்கோம். 1968ம் ஆண்டில் இருந்து, இந்த காவிரி நதிநீர் பிரச்னை நடந்து கொண்டு இருக்கிறது. ஏறக்குறைய 55 ஆண்டு காலமாக, இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறதே ஒழிய இதுவரைக்கும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.


நாகையில் பயிர்கள் வாடிப்போனதை கண்டு வேதனையடைந்து மாரடைப்பால் இறந்த விவசாயி ராஜ்குமார் மனைவியை  தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினோம். அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமையே, இப்படி இருக்கிறது என்றால், அப்ப நாட்டின் நிலைமை என்ன? இது யாருடைய பூமி? ராஜராஜ சோழன் ஆண்ட பூமி யானை கட்டி, போர் அடித்த அந்த ராஜராஜ சோழன் வாழ்ந்த, இந்த தஞ்சையில் இன்று விவசாயிகள் கடனாளியாக மாறி இருக்கும் நிலையை காணும் போது மிகவும் வேதனையாக உள்ளது. இத்தனை காலம் ஆட்சி செய்தவர்கள், செய்து கொண்டு இருப்பவர்கள் தமிழகத்திற்கும், மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்ற கேள்விதான் எழுகிறது.




செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காவிரி பிரச்சனை வருகிறது. மழைக்காலம் வந்தால் அதை மறந்துவிட வேண்டியது. பின்னர் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்னை வந்து விடுகிறது. இதற்கான நிரந்தர தீர்வுதான் என்ன? நேற்று கர்நாடகத்தில் பந்த் நடத்தினர். இன்று தமிழக எல்லையில் பேருந்துகளை நிறுத்தி தமிழர்களை இறங்கி நடந்து போக சொல்கிறார்கள். இந்த 50 ஆண்டுகாலத்தில் விவசாயிகளுக்கு என்ன தீர்வு கிடைத்துள்ளது. ஆட்சிகள்தான் மாறுகிறதோ ஒழிய காட்சிகள் அப்படியேதான் உள்ளது. தண்ணீர் இல்லாமல் டெல்டா பகுதி முழுவதும் பாலைவனமாக மாறி உள்ளது. விவசாயிகள் வாழ்ந்தால்தான் இந்த நாடு வாழும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. விவசாயிகளுக்கு உறுதுணையாக எப்போதும் தேமுதிக இருக்கும்.


பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்கள் தான் காரணம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தேமுதிக எடுக்கும். உண்ணாவிரத நோக்கம் குறித்து கவர்னரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.


தமிழக பகுதிகளான கச்சத்தீவு குடகு உள்ளிட்ட தமிழக பகுதிகளை அரசியல் ஆதாயத்திற்காக. விட்டுக் கொடுத்ததால்தான் இன்று பாலைவனமாக காட்சியளிக்கிறது. தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது. நதிநீர் பிரச்சனை தீர வேண்டும் என்றால் நதிகள் இணைப்பு மட்டும் தான் ஒரே தீர்வு. இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கும் போது தேசிய நதிகளை இணைப்பது மட்டும்தான் இதற்கு நிரந்தர தீர்வு. விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் என்பது தற்காலிக தீர்வுதான். இதற்கு நிரந்தர தீர்வு வர வேண்டும் இதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


டெல்டாவில் தடுப்பணைகள் தண்ணீரை சேர்த்து வைப்பதற்கு நடவடிக்கை இல்லை ஒரு ஏரி வாய்க்கால் கூட தூர்வாரப்படவில்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.