தஞ்சாவூர் மாவட்டத்தில் 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிவரன் முறை செய்யப்பட்டதை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ததை கண்டித்து

  கிராம நிர்வாக அலுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் க.சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் தியாகராஜன், மாவட்ட இணை செயலாளர்கள் ராஜசேகரன், ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.




ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அரசாணையின்படி, பணிவரன்முறை செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகம் ரத்து  செய்துள்ளது.நீக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய காலத்தில் நில அளவை மற்றும் நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டும். சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும், போதிய கால அவகாசம் அளிக்காமலும், பலதரப்பட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்க சொல்லி துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். பலமுறை வலியுறுத்தியும் அடங்கல் சான்று வழங்குவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெளிவான சுற்றறிக்கை வழங்க வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கையின்படி, கிராம நிர்வாக அலுவலர்களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து அனைத்து விடுமுறை நாட்களிலும் பணிச்சுமையை ஏற்படுத்துவதால், மனதளவில் ஏற்படும் பாதிப்பை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும், விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிகளை தவிர மற்ற பணிகள் செய்ய வலியுறுத்துவதை நிறுத்த வேண்டும்.




மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகளை அச்சுறுத்தி பதிவு பெற்ற சங்க நிர்வாகத்தை செயல்படவிடாமல் மாவட்ட நிர்வாகம் தடுப்பதை கைவிட வேண்டும், முன்கள பணியாளர்களுக்கான சலுகைகள் செலவினங்கள் மற்றும் பணப்பயன்களை மாவட்ட நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பெற்றுத்தரவேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற நிரந்தர மற்றும் தரமான அலுவலகம் அமைத்து தரவேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.முன்னதாக கடந்த 23 ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும், 25ஆம் தேதி அனைத்து கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 400 கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.