கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி தேசிய இளைஞர்  தினமாகவும், இளையோர் எழுச்சிநாளாகவும், அவரது எழுச்சியுரை உறுதிமொழி ஏற்பு தினமாகவும் கடைபிடிக்கப்பட்டது.


கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து, கூட்டுப்பிரார்தனையும், விவேகானந்தர் எழுச்சியுரை உறுதியேற்பும் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் அமைப்பாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சு.கல்யாணசுந்தரம், நகர்மன்ற முன்னாள் தலைவர் சு.ப.தமிழழகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை செயலாளர் வி.சத்தியநாராயணன் எழுச்சியுறை உறுதி மொழி ஏற்பு  வாசித்தார். சோழமண்டல  விவேகானந்தர் சேவா சங்க செயலாளர் பாஸ்கரராஜபுரம் ராமநாதன் நன்றி கூறினார்.




இந்நிகழ்ச்சியில்  குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழா.சி.மகேந்திரன், இணைச் செயலாளர் வேதம் முரளி, தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கிரி, பாபநாசம் ரயில் உபயயோகிப்பாளர் சங்க செயலாளர் சரவணன், சோழ மண்டல விவேகானந்தர் சேவா சங்க தலைவர் பாஸ்கரன், ரெட்கிராஸ் அமைப்பின் நிர்வாகிகள் பாஸ்கர், ரொசாரியோ  மற்றும் ராமகிருஷ்ண விவேகானந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் எம்.பி. செ.ராமலிங்கம் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றி, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்து தாயகம் திரும்பி 1897-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கும்பகோணத்துக்கு வருகை புரிந்து 3 நாட்கள் தங்கினார். அப்போது நகரின் முக்கிய பிரமுகர்கள் சார்பில் அளித்த வரவேற்புக்கு, பதிலுரை அளிக்கும் வகையில் குடந்தை போர்ட்டர் டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில், சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தின் பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார் குறிப்பாக எழுமின், விழிமின், குறிசாறும் வரை நில்லாது செல்மின் என்ற அவரது சொற்றொடர் கும்பகோணத்தில் தான் முதன் முதலில் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.




சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் கும்பகோணம் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.  இளைஞர்களின் வழிகாட்டியாக உலக முழுவதும் அறியப்பட்ட சுவாமி விவேகானந்தர் சிலை கும்பகோணத்தில் அவர் உரையாற்றிய டவுன்ஹாலில் அமைய உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.சுவாமி விவேகானந்தர் தமது ஆன்மீக பயணத்தில் பெரும்பாலும் ரயில் பயணத்தையே மேற்கொண்டுள்ளார்.  அதனை நினைவு கூறும் வகையில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு சுவாமி விவேகானந்தரின் பெயரை வைக்க மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை முன்வந்தால் அது மேலும் சிறப்பாக அமையும் என்றார்.




இதே போல் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை  தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம், மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளையானது கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை இந்திய மருத்துவம்  மற்றும் ,  சித்த மருத்துவ பிரிவு, ஹோமியோபதித்துறைஇணைந்து நடத்திய கொரோனாவை தடுக்கும் விதமாக கபசுரக்குடிநீர் வழங்குதல் மற்றும் இலவச முகக்கவசம் வழங்கும் முகாம் கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில் நடைபெற்றது. முகாமை சித்தா பிரிவு மருத்துவர் பாஸ்கர், மருந்தாளுனர் மீனாட்சி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.