மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது முதலைமேடு திட்டு, திட்டப்படுகை, நாதல்படுகை கிராமங்கள், இக்கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை உள்ளடக்கி கொள்ளிடம் ஆற்றுக் கரை செல்கிறது, கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடிக்குமேல் தண்ணீர் திறக்கப்படும் போதெல்லாம் இக்கிராமங்கள்  தண்ணீரில் மூழ்வது வாடிக்கை. விவசாயமும் முழுவதும் பாதிக்கப்பட்டுவிடும். இதற்கு நிரந்தர தீர்வாக ஊரை ஒட்டியுள்ள இடத்தில் வெள்ளம் புகாதவாறு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை வைத்திருந்தனர். 




ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதாலும், இந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டு அது கொள்ளிட மாட்டில் 2 லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த இரண்டு மாதத்திற்குள் 7 முறை கொள்ளிடம் ஆற்றுநீர் ஊருக்குள்ளும், வயல் பகுதிளிலும் புகுந்து அக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை சிதறிடித்துவிட்டது. மேலும் தீபாவளி அன்று அகதிகளைப்போல் முகாம்களில் தங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.  




இந்நிலையில் இவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும், அதற்கு 10 அடி உயரத்திற்கு ஆற்றை ஒட்டி தடுப்பு சுவர் அமைத்துத்தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்திருந்த முதலைமேடு, நாதல்படுகை உள்ளிட்ட திட்டும் படுகை மக்கள் ஒன்று சேர்ந்து முதலைமேடு திட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தித் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம்  மனு ஒன்றை அளித்தனர். கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் லலிதா இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், ஓரிரு தினங்களில் இதுகுறித்து கொள்ளிடத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் சற்று ஆறுதலும் அங்கிருந்து தடுப்பு சுவர் அமைந்துவிடும் என்ற நம்பிக்கை கலைந்துசென்றனர்.




பீமா சுகம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  லிகாய் முகவர்கள் சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


மயிலாடுதுறை எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு லிகாய் முகவர்கள் சங்கத்தினர் கிளைத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கோட்ட துணைத் தலைவர் முனுசாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முகவர்கள் இல்லாமல் பாலிசிதாரர்களே நேரடியாக பாலிசி எடுத்துக்கொள்ளும் வகையில் ஜனவரி மாதம் பீமா சுகம் என்ற தளத்தை ஐஆர்டிஏ அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தளம் நடைமுறைக்கு வருவதன்மூலம் முகவர்களுக்கு ஐஆர்டிஏ பரிந்துரைத்துள்ளபடி பாலிசி கமிஷன் தொகை குறைவதோடு, பணிக்கொடை, குழுக்காப்பீடு போன்றவைகளும் பறிபோகும் வாய்ப்பு உள்ளது.




அதேபோல் பாலிசிதாரர்களில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு காப்பீட்டுப் பயன் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவதோடு, பாலிசிதாரருக்கு தேவையான பாலிசி கிடைக்காமல் கவர்ச்சித் திட்டங்களை எடுத்து வைக்கும் போக்கு அதிகரிக்கும். எல்ஐசி நிறுவனத்தை பொறுத்தவரை பொதுக்காப்பீட்டுத் துறையில் உள்ள நிறுவனத்தை மாற்றும் வசதி விரைவில் ஆயுள் காப்பீட்டுத் துறையிலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மூன்று தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பீமா சுகம் தளத்தை அறிமுகப்படுத்த முயலும் ஐஆர்டிஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதில், முகவர்கள், எல்ஐசி ஊழியர்கள் மட்டுமின்றி சிஐடியு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.