திருவண்ணாமலை மாவட்டம்  ஆராசூர் கிராமத்தில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவி குடும்ப பாரத்தை குறைக்க நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கி அறுவடை செய்து வருகின்றார்.



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் - காளியம்மாள் தம்பதி.  இவர் நெல் அறுவடை இயந்திரம் வைத்துள்ளார். இவர்களுக்கு  4 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால் அறுவடை இயந்திரத்தை அவரே இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீர் உடநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது யார் இயந்திரத்தை இயக்குவது என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்போது அவரின் மூன்றாவது மகளான மீனா, தானே முன்வந்து அறுவடை இயந்திரத்தை இயக்குவதாக கூறியுள்ளார். பெண் குழந்தையை ராட்சத தோற்றத்தில் இருக்கும் அறுவடை இயந்திரம் இயக்க கூறினால் ஊர் என்ன சொல்லுமோ என்கிற தயக்கம் தம்பதிக்கு இருந்துள்ளது. இத்தனைக்கும் 10ம் வகுப்பு மாணவி அவர். 


 



துவக்கத்தில் இருந்தே பெற்றோருக்கு விவசாயப் பணிகளில் உதவுவதில் மீனாவிற்கு அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. அதனால் தான் அவரது தந்தை அறுவடை இயந்திரத்தை இயக்கும் போது உடனிருந்து அதை ஆர்வமுடன் கவனித்துள்ளார். தற்போது அறுவடை காலம் என்பதால், இரவும், பகலாக பணி இருக்கும். இந்த நேரத்தில் இயந்திரத்தை இயக்காமல் இருக்க முடியாது என்பதால் வேறு வழியின்றி அவரே இயந்திரத்தை இயக்கி அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறார்  


 



 


முதலில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஏக்கர் நிலத்தில் அறுவடை இயந்திரத்தை இயக்கி முழுவதையும் அறுவடை செய்து அசத்தி உள்ளார் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மீனா. அவரது அறுவடை ஆற்றலை பார்த்து ஊர் மக்களும், தங்களுக்கு அறுவடை செய்து தருமாறு கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள பிற விளைநிலங்களுக்கும் அறுவடைப் பணியாற்றியுள்ளார். தற்போது பள்ளிகள் மூடியிருப்பதால் அதுவே தற்போது அவருக்கு பணியாகிவிட்டது. படிப்புக்கு சில மணி நேரங்களை ஒதுக்கிவிட்டு, பெரும்பாலான நேரம் விவசாயிகளுக்கு அறுவடை பணியாற்றி வருகிறார் மீனா. 
ஆண்கள் மட்டுமே இயக்கி வரும் அறுவடை இயந்திரத்தை பத்தாம் வகுப்பு மாணவி மீனா இயக்குவது காண்போரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்றைய காலத்தில் ஆண்கள் கூட இயக்க தயங்கும் இந்த நெல் அறுவடை இயந்திரத்தை இளம் வயதிலேயே சிறுமி இயக்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.


 




இதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர்  மற்றும்  கிராம மக்கள் மீனாவிற்கு வாழ்த்து கூறியும் அடுத்த தலைமுறை விவசாயம் நிச்சயமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாணவி மீனா உதவுவார் என்று நம்பிக்கை தெரிவித்தும் செல்கின்றனர்.