நடிகர் விஜய்யின் 47 வது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் நாளை  செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என நடிகர் விஜய் அவரது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்ட ரசிகர்கள் விஜயின் பிறந்தநாளை எளிமையாக மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள செருப்பு தைக்கும் ஏழை தொழிலாளர்கள் 47 பேருக்கு மாதம் 200 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விஜய் மக்கள் மன்றம் சார்பில் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் மன்றத் தலைவர் சி.எஸ்.குட்டிகோபி பங்கேற்று, ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளிகள் 15 பேருக்கு தலா 200 ரூபாய் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், இந்த கொரோனா ஊராடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும்  வழங்கினர். 




விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி பொருளாளர் பிரவீன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஆகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம், வள்ளாலகரம் ஊராட்சியில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் 12 பேருக்கும், சீர்காழியை அடுத்த மடவாமேடு மீனவ கிராமத்தில் 20 பேருக்கும் அவர்கள் மாத ஊக்கத் தொகையை வழங்கினர்.




இந்நிலையில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள் என்றாலே படத்திற்கு போஸ்டர் ஒட்டுவதும், பேனர் களுக்கு பால் அபிஷேகம் செய்வதுதான் வழக்கம் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. அதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் ரசிகர்களின் விஜய் மக்கள் இயக்கத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றனர்.




பல்வேறு கிராமப் பகுதிகளில் கொரோனாவால்  வேலைவாய்ப்பு இன்றி அல்லல் படுவோருக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி  அரசு மருத்துவமனைக்கு  பிரசவம், விபத்து மற்றும் மகப்பேறு முடிந்து  தாய்,சேய்  இலவசமாக வீடுகளுக்கு திரும்ப செல்ல ஊரடங்கு நாட்களில்  இலவசமாக 4 கார்களை பயன்படுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கியது மட்டும் இன்றி, தற்போது விஜய்யின் பிறந்தநாளை அடுத்து மாவட்டத்திலுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளி, ஆதரவற்ற வயதான மீனவ பெண்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஏழை எளிய மக்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக தலா 200 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவங்கியிருப்பது பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.