தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள்கட்சி மற்றும் வன்னியர் சங்க அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க அணியில் பா.ம.க இணைவதற்காக நடந்த பேச்சுவார்த்தையிலும், வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது இதை அடுத்து, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.




தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வாசித்தார். அந்த அறிக்கையில், கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்தோம்.


இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது என தெரிவித்தார்.


வன்னியர்களுக்கு மட்டும் தனியாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, இந்த ஒதுக்கீட்டை ஏற்று கொண்டதுடன், அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. அதே நேரம், இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டை பொதுவில் பெற்றுவந்த பிற சாதிகள் மத்தியில் இந்த சட்டத்தால் அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக தென்மாவட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில் இந்த சட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த இடஒதுக்கீட்டால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.கவின் வாக்குவங்கி பாதிக்கப்படலாம் என்பதை அறிந்து, இது தற்காலிகமானது தான் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரது பேச்சுக்களும் விவாதப் பொருளாக மாறியது.


இதன்பின்னர், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு கட்டத்தில், வன்னியர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தி.மு.க அரசு அரசாரணையை வெளியிட்டது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்றது. இந்த  வழக்கில் உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள்,வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது  என தீர்ப்பளித்துள்ளனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி உட்பட வன்னியர் அமைப்புகள்  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.




இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையத்தில், தஞ்சை மேற்கு மாவட்ட பாமக வன்னியர் சங்கத்தின் சார்பில், வன்னியருக்கான 10.5% சதவிகித இடஒதுக்கீட்டை  மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்து தடை ஆணை பெற்று உள் ஒதுக்கிட்டை நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, மக்கள் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலமாக வந்த வன்னியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டனர்.  இதில், வன்னியர் சங்க மாவட்ட தலைவர்  தமிழ்செல்வம் தலைமை  வகித்தார். வன்னியர் சங்க மாநில துணை தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன உரையாற்றினார், பாமக மாநில இளைஞரணி துணை தலைவர் விஜயராகவன்,  பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் அரசூர்ஆறுமுகம்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் திருமணத்தை முடித்து விட்டு  கர்ணன்-வசந்தி ஆகியோர்  மணமக்களாக மாலையுடன், ஊர்வலத்திலும்,  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.