தமிழ்நாடு முழுவதும் இன்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்குரிய இறுதி வாக்காளர் பட்டியலினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட அனைத்து அலுவலர்கள் அதனைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் 216 வார்டுகளில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்குரிய வாக்காளர் பட்டியல்கள் தொடர்புடைய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலர் நகராட்சி ஆணையர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்களால் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கூத்தாநல்லூர் நகராட்சியில் 23,388 வாக்காளர்களும் மன்னார்குடி நகராட்சியில் 62,988 வாக்காளர்களும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 17,516 வாக்காளர்களும், திருவாரூர் நகராட்சியில் 50,245 வாக்காளர்களும் உள்ளனர். பேரூராட்சியினை பொறுத்தவரை குடவாசல் பேரூராட்சி 11,882 வாக்காளர்களும், கொரடாச்சேரி பேரூராட்சியல் 5,835 வாக்காளர்களும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18,662 வாக்காளர்களும், நன்னிலம் பேரூராட்சியில் 9,597 வாக்காளர்களும், நீடாமங்கலம் பேரூராட்சியல் 7,849 வாக்காளர்களும், பேரளம் பேரூராட்சியில் 5,048 வாக்காளர்களும், வலங்கைமான் பேரூராட்சியில் 9,491 வாக்காளர்களும் என மொத்தம் இந்நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் 1,06,434 ஆண் வாக்காளர்களும், 1,16,027 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
நடைபெறவுள்ள நகராட்சி உள்ளாட்சி தேர்தல்களுக்கு 282 எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டிருந்தார் மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த 13 மற்றும் 14 மேலும் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது
இந்த சிறப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். மேலும் புதியதாக பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்ட பின்னர் இறுதியாக இன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.