தஞ்சாவூர்: எப்போங்க முடிப்பீங்க... வாகன ஓட்டுனர்கள் மிகவும் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர். எதற்காக தெரியுங்களா? தஞ்சை - நாகை சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மிகவும் திணறி, திணறி செல்வதால் வாகன ஓட்டுனர்கள் அவதியடைந்து வருகின்றனர்.


தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம்


தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்குவாசல், பள்ளியக்ரஹாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.


10 ஆயிரம் இடத்தில் ஆழ்துழை குழிகள் அமைப்பு


அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கீரிட் மூடியும் போடப்பட்டுள்ளது.


தஞ்சை - நாகை சாலையானது, நாகை, திருவாரூர், பட்டுக்கோட்டை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக பிரதான சாலையாக உள்ளது. மேலும் நாகை, வேளாங்கண்ணிக்கு செல்லும் பஸ்கள், வேன்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையில் உள்ள சோழன்நகர் பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பிற்காக ஆள்நுழை குழியின் கான்கீரிட் மூடி திறக்கப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டது.


வாகன ஓட்டுனர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி


இதனால் அதன் அருகே இரும்புத்தடுப்பு போடப்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துடன் சென்று வந்தனர். தற்போது அதன் அருகே உள்ள சாலையிலும், பாதாள சாக்கடையின் குழாய் பதிக்கும் பணிக்காக 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.


போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அவதி


இதன் காரணமாக சோழன் நகர் பகுதியில் உள்ள இரு வழிச்சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றப்பட்டு, அனைத்து வாகனங்களும் ஒரு வழிச்சாலையிலே சென்று வந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுனர்கள் அவதியடைந்தனர். முக்கியமாக மாலை வேளையில் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை


இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் தரப்பில் கூறியதாவது: தஞ்சை- நாகை சாலை மிகவும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த இடத்தில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவதற்கு முன்பு போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற பெண்கள் நிலைதான் மிகவும் மோசமானது. தடுமாறியபடியே சென்றனர். எனவே பணிகளை விரைந்த முடிந்து போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும். மழைக்காலம் என்பதால் பள்ளத்திற்கு தோண்டப்படும் மண் சாலை முழுவதும் பரவி வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டு விடும்,.எனவே அதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.