தஞ்சாவூர்: திருமணமாகி 67 நாட்களிலேயே மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்த உறவினர் திடீர் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சாவூரில் திருமணமாகி 67 நாளில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை செய்வதற்கு அலைக்கழிப்பு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்றிரவு திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள மேலத்திருப்பூந்துருத்தி அற்புத மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சார்லஸ் என்பவரின் மகன் விவேக் (35). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், தஞ்சாவூர் கரந்தை சருக்கை சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த கிருபையன் என்பவரின் மகள் மார்த்தாள் மேரி(29) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது.


ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தாய் வீட்டுக்கு மார்த்தாள் மேரி வந்துள்ளார். பின்னர் அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி மார்த்தாள் மேரியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்துச் சென்று அவரது கணவர் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.




தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மார்த்தாள் மேரிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, அவரை அவரது கணவர் விவேக் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு மார்த்தாள் மேரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இத்தகவல் மார்த்தாள் மேரியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அலறி அடித்துக் கொண்டு மார்த்தாள் மேரியின் பெற்றோர் வந்துள்ளனர். தொடர்ந்து தங்கள் மகளின் உடலை பார்த்த அவர்களுக்கு சந்தேகம்ட எழுந்துள்ளது. உடன் இதுகுறித்து நடுக்காவேரி போலீசில் மார்த்தாள் மேரியின் பெற்றோர் புகார் செய்தனர். அந்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மார்த்தாள் மேரியின் உடலைக் கைப்பற்றி திருவையாறு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.


ஆனால், திருவையாறு மருத்துவமனையில் தங்களின் மருமகன் விவேக்குக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது. எனவே தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என மார்த்தாள் மேரியின் உறவினர்கள் வலியுறுத்தினர். இதன்படி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மார்த்தாள் மேரியின் உடல் கொண்டு செல்லப்பட்டபோது, இடமில்லை எனக் கூறி அங்குள்ள ஊழியர்கள் மறுத்தனராம்.


இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் கரந்தை சருக்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சி தொடக்கம் என்பதால் அதிகளவில் போக்குவரத்து சென்று வந்த நிலையில் இந்த திடீர் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.


தகவலறிந்த தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை முறைப்படி நடைபெறும் என கோட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே, மார்த்தாள் மேரி திருமணமாகி 67 நாள்களில் இறந்ததால், அவரது மரணம் குறித்து கோட்டாட்சியர் தனியாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.