Trichy Panjapur Bus Stand: கிளாம்பாக்கத்தையே ஓரம் கட்டுகிறதா பஞ்சப்பூர்?; இதுல என்னென்ன வசதிகள் இருக்கு. வாங்க பார்ப்போம்
Trichy Panjapur New Bus Stand: பயணிகளுக்கான காத்திருப்பு அறைக்கு அருகே கழிவறை வசதிகள், அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளுக்கு உதவும் வகையில் உதவி மையங்கள்.

Trichy Panjapur New Bus Stand: இனி இதுதான் திருச்சியின் முகவரி... அட்டகாசமாக ஏராளமான வசதிகளுடன் கிளாம்பாக்கத்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் படபடவென்று மும்முரமாக தயாராகிக்கிட்டு இருக்கு. சரி இதுல என்னென்ன வசதிகள் இருக்கு. வாங்க பார்ப்போம்.
திருச்சியின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளது மத்திய பேருந்து நிலையம். தொழில்நகரமான திருச்சியின் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் மத்திய பேருந்து நிலையத்தை சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் வர்த்தக நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது திருச்சி மத்திய பேருந்து நிலையம். இந்த நெருக்கடி நிலையை போக்க பஞ்சப்பூர் அருகே சுமார் ரூ.400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கு. அப்படின்னு பார்க்கலாமா?

சென்னைக்கு அடுத்ததாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்றால் அது திருச்சிதான். தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மாவட்டம் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை இணைக்கிறது. திருச்சியை தமிழகத்தின் தலைநகராக கூட அறிவிப்பதற்காக ஒரு காலத்தில் ஆய்வுகள் நடந்ததும் உண்டு. தென் மாவட்டங்களில் இருந்தும் வடமாவட்டங்களில் சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் வரும் மக்களை திருச்சி தான் இணைக்கிறது. அந்தளவிற்கு திருச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகராகும். குறிப்பாக தென் மாவட்டங்களில் வரும் சரக்கு வாகனங்கள், பேருந்துகள், திருச்சியை கடந்து தான் செல்கின்றன. அந்த வகையில் திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் மிக முக்கியமான இடமாகும்.
இன்றைய காலக்கட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. முக்கியமாக திருச்சி நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் விடுமுறை தினங்களில் சொல்லவே வேண்டாம். இந்த போக்குவரத்து நெரிசலை போக்க திருச்சி புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக பல பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அந்த பணிகள் வேகமாக மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிவடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இப்போது கிளாம்பாக்கத்துக்கே டப் கொடுக்கும் வகையில் பஞ்சப்பூரில் அமைக்கப்படும் பேருந்து நிலையத்தில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே சரக்கு வாகன நிறுத்த முனையம், டைடல் பார்க், சோலார் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிநவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் அமைக்கப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் மீதமுள்ள பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். பேருந்து நிலையத்தின் சில பகுதிகளில் ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதி, ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்து நிறுத்தம், பயணிகளுக்கான ஓய்விடம், தங்குமிடம், உணவகம் என பிரமாண்டமாக பல்வேறு வசதிகள் செய்யப்பட இருக்கிறது.
பயணிகளுக்கான காத்திருப்பு அறைக்கு அருகே கழிவறை வசதிகள், அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளுக்கு உதவும் வகையில் உதவி மையங்கள் , எல்இடி திரைகள் அமைக்கும் பணி கிடுகிடுவென்று நடந்துள்ளது. மேலும் கூரை பகுதிகளில் led விளக்குகள், மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்தியேகத் தடங்கள், புல்வெளி பரப்புகள், பூங்காக்கள் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிளாம்பாக்கத்தில் தான் இது போன்ற அதிநவீன வசதிகள் இருக்கும் நிலையில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியிலும் இதே போல பேருந்து நிலையம் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து கூடுதலாக அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஓரிரு மாதத்தில் இந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் எனத் தெரிகிறது. இதனால் திருச்சியின் அடையாளமாக இனி பஞ்சப்பூர் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.