கிர்ர்ர்ங்குதுதே... போதை உச்சிக்கு ஏற அலப்பறை செய்த திமுக நிர்வாகி... தட்டித்தூக்கியது போலீஸ்
உச்சிக்கு ஏறிய போதையில் நிலை கொள்ளாமல் தடுமாறியபடியே வந்த அந்த போதை ஆசாமி திடீரென பூக்கடைகளுக்கு பூ வாங்குவதற்காக வந்த பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகை ரகளையில் இறங்கினார்.

தஞ்சாவூர்: போதை உச்சந்தலைக்கு ஏற திமுக நிர்வாகி சலம்பிய சலம்பல் மக்களை முகம் சுளிக்க வைத்தது. புகார் போலீசுக்கு பறக்க இப்போ போதை ஆசாமி கம்பி எண்ணுகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவில், வடக்கு வீதியில் ஏராளமான பூக்கடைகள் உள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பூக்களை வாங்க வருவதால், எப்போதும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும். முக்கியமான வியாபார இடமாக இது திகழ்ந்து வருகிறது. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்க இங்குதான் வருவார்கள்.

இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இந்நிலையில் தி.மு.க., கரை வேஷ்டி இடுப்பில் இருந்து நழுவிக் கொண்டே இருக்க, ஒவ்வொரு முறையும் எடுத்து எடுத்து கட்டிக் கொண்டு தலைக்கேறிய மது போதையில் தள்ளாட்டத்துடன் வந்துள்ளார் ஒரு ஆசாமி. பாடி ஸ்டாராங்கு... பேஸ் மட்டம் வீக்கு என்பது போல் உச்சிக்கு ஏறிய போதையில் நிலை கொள்ளாமல் தடுமாறியபடியே வந்த அந்த போதை ஆசாமி திடீரென பூக்கடைகளுக்கு பூ வாங்குவதற்காக வந்த பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகை ரகளையில் இறங்கினார்.
சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர்களை அசால்டாக எட்டி உதைப்பது, தள்ளி விடுவது என்று அவரது அலும்புகள் அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரு சைக்கிளை இழுத்து தள்ளும்போது தானும் கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் திணறினார். வேட்டியை அண்டர்வேர் தெரிவது போல் மடித்துக் கட்டிக் கொண்டு அவர் செய்த அலப்பறைகள் பெண்களை முகம் சுளிக்க வைத்தது.
பின்னர் அந்த போதை போதை ஆசாமியை மற்றொரு நபர் துாக்கிவிட்டு அழைத்து சென்றார். இதை அங்கு வந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இது வைரலான நிலையில் பூக்கடை சந்தையைச் சேர்ந்த பூக்கடை உரிமையாளர் சிவா, கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அதில், துக்க நிகழ்ச்சியை அனுசரிக்கும் வகையில், பூக்கடைகளை மூடிவிட்டு, மீண்டும் மாலையில் பூக்கடைகளைத் திறந்து கொண்டிருந்தோம்.
அப்போது, தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரான கோவிந்தராஜ் (51) என்பவர் கடைகளையும், வாகனத்தையும் உடைத்து ரகளை செய்தார் என்று தெரிவித்து இருந்தார். அப்புறம் என்ன? போலீசார் சட்டென்று வழக்குப்பதிவு செய்து திமுக நிர்வாகி கோவிந்தராஜை தட்டித் தூக்கி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்குக்கு முக்கு மதுபான கடைகளை திறந்தால் இப்படிதான் பெண்களின் பாதுகாப்பும், வியாபாரிகளின் நிலையும் மாறி போகும் என்று பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.