திருவையாறில் நாளை நடக்கிறது சத்குரு தியாகராஜ சுவாமிக்கு இசையஞ்சலி நிகழ்ச்சி
திருவையாறில் ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்ஸவ சபா சார்பில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. நாளை 18ம் தேதி தியாகபிரம்மத்திற்கு இசையஞ்சலி நடக்கிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நாளை சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கேற்று நடத்தும் இசை அஞ்சலி நாளை நடக்கிறது.
திருவையாறில் ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்ஸவ சபா சார்பில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. நாளை 18ம் தேதி தியாகபிரம்மத்திற்கு இசையஞ்சலி நடக்கிறது.
Just In




14ம் தேதி மாலை 6 மணிக்கு மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இவ்விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு கே. பரத்சுந்தர் பாட்டு, 7.20 மணிக்கு நிர்மலா ராஜசேகர் வீணை, 7.40 மணிக்கு குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா பாட்டு, 8 மணிக்கு பெங்களூரு சுமா சுதீந்திரா வீணை, 8.20 மணிக்கு பாபநாசம் அசோக் ரமணி பாட்டு, 9 மணிக்கு மதுரை டி.என்.எஸ். கிருஷ்ணா பாட்டு உள்பட இரவு 11 மணி வரை இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.
மறுநாள் 15 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் இரவு 7 மணிக்கு ராஜேஷ் வைத்யா வீணை, ஏல்லா ஸ்ரீவாணி வீணை, ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் பாட்டு, கர்நாடக சகோதரர்கள் கே.என். சசிகிரண், பி. கணேஷ் பாட்டு உள்பட இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.
16ம் தேதி இரவு நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கல் மாலா சந்திரசேகர், ஜெயந்தி குமரேஷ் வீணை, சந்தீப் நாராயண் பாட்டு, கணேஷ், குமரேஷ் இரட்டையரின் வீணை, காயத்ரி கிரிஷ் பாட்டு ஆகியவை நடந்தது. இதேபோல் நேற்று மாலை ஷேக் மெகபூப் சுபானி, காலிஷாபி மெகபூப், பெரோஷ் பாபு நாதஸ்வரம், திருப்பாம்புரம் சகோதரர்கள் டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம், டி.கே.எஸ். சேஷகோபாலன் நாதஸ்வரம், மஹதி பாட்டு, சுதா ரகுநாதன் பாட்டு ஆகியவை நடந்தது.
நாளை 18ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனைகள், 10.30 மணிக்கு பி. சுசித்ரா குழுவினரின் ஹரி கதை, இரவு 7.20 மணிக்கு கடலூர் எஸ்.ஜெ. ஜனனி பாட்டு, 8 மணிக்கு சி. குருசரண் பாட்டு, 8.20 மணிக்கு பிரபஞ்சம் எஸ். பாலச்சந்திரன் புல்லாங்குழல் நடக்கிறது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு ஓ.எஸ். அருண் பாட்டு, 10.15 மணிக்கு நாகை ஆர். முரளிதரன், புதுக்கோட்டை ஆர். அம்பிகா பிரசாத், ஜி. பத்ரிநாராயணன் வயலின் ஆகியவை நடக்கிறது.
தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் செய்தவர் தியாக பிரம்மம் என்று போற்றப்படும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர். சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.
திருவாரூரில் உள்ள புதுத்தெருவில் ராமபிரம்மம் - தாய் சீதாம்பாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தியாகராஜர். இவர் சிறுவயதிலேயே குடும்பத்துடன் திருவையாறுக்கு குடிபெயர்ந்தார். தியாகராஜர் பதினெட்டாம் வயதில் பார்வதி என்பவரை மணந்தார். பார்வதி குழந்தைப் பேறின்றி இறந்துவிட்டார். பின்னர் பார்வதியின் தங்கை கனகம்மாளை தியாகராஜர் மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற மகள் பிறந்தார்.
இரண்டாம் துலாஜாஜி தம் சபையில் ராமநவமியின்போது ராமபிரம்மம் ராமாயணத்தைைப் படித்து விரிவுரை கூறுவார். இவரது அறிவுத் திறனைப் பாராட்டிய துலாஜாஜி ராமபிரம்மத்துக்கு பசுபதி கோயிலில் கொஞ்சம் நிலமும், திருவையாறு திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டையும் அன்பளிப்பாக கொடுத்தார். ராமபிரம்மம் தன் மகன்களுக்கு விட்டுச்சென்ற சொத்து இந்த நிலம் மற்றும் வீடு ஆகியவைதான்.
ராமபிரம்மம் காலமானதும் பாகப்பிரிவினை நடந்தது. இதில் வீட்டின் வடக்குப் பகுதியை தியாகராஜருக்கும், தெற்குப் பகுதியை அவருடைய அண்ணன் ஜல்பேசன் என்கிற பஞ்சாபகேசனுக்கும் ஒதுக்கினர். இந்த வீட்டில்தான் தியாகராஜர் தனது இறுதிகாலம் வரை வாழ்ந்தார். இவரது மனைவி 1845 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தியாகராஜர் 1847 ஆம் ஆண்டு ஜன. 6-ம் தேதி மறைந்தார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி இருக்கிறது. ஆண்டுதோறும் இவ்விடத்தில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒன்று திரண்டு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்துகின்றனர்.