தஞ்சாவூர்: தஞ்சையில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதர காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல வீடுகளில் காலை வேளையில் டிபனுக்கு தக்காளி சட்னிதான் பிரதான இடம் பிடிக்கும். கடந்த 10 நாட்களாக அந்த இடத்தை கொத்தமல்லி சட்னியும், புதினா சட்னியும் பிடித்துள்ளன.


தமிழக மக்களையும் தக்காளியையும் பிரிக்கவே முடியாது. ருசியான சாம்பாருக்கும், அருமையான ரசத்திற்கும் தக்காளி இல்லாமல் செய்யவே மாட்டார்கள். அதுமட்டுமா? காலையில் இட்லி, தோசை போன்ற டிபனுக்கும் முக்கிய சைட் டிஷ் சட்னியாக தக்காளிதான் இருக்கும், இப்படி இல்லத்தரசிகளின் சமையலறையில் தனியிடம் பிடித்த தக்காளி விலை தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ளது. கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தங்கத்தின் விலையை போல் சர்ரென்று உயர்ந்து நேற்றைய விலை ரூ.120 ஆகவும், இன்றைய விலை ரூ.140 ஆகவும் மாறிவிட்டது. 


தஞ்சை அரண்மனை வளாகத்தின் அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 




இதேபோல் தஞ்சையில் இருந்தும் வெளியூர்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பெட்டிகளில் (ஒரு பெட்டியில் 25 கிலோ தக்காளி இருக்கும்) தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.


ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தஞ்சையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லை. இதனால் தஞ்சைக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் தக்காளி விற்பனைக்கு வருகிறது.


அதிலும் குறிப்பாக 1, 200 முதல் 1500 பெட்டிகளே விற்பனைக்கு வருகின்றன. தேவை அதிகமாக உள்ள நிலையில் வரத்து குறைவாக இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. காமராஜர் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில்லறை விற்பனையில் தக்காளி ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. 


இந்நிலையில் இன்று தக்காளியின் விலை மீண்டும் உயர்ந்து சில்லறை விற்பனையில் ரூ.140 ஐ தொட்டுள்ளது. இதனால் தஞ்சை பகுதியில் மணக்க மணக்க வைக்கப்படும் சாம்பார், ரசம், தக்காளி விலை உயர்வால் வீடுகளில் “கட்” ஆகி உள்ளது. காலை டிபனுக்கும் தக்காளி சட்னி கட் செய்யப்பட்டு கொத்தமல்லி, புதினா, வெங்காயசட்னி இடம் பிடித்துள்ளது.