நியாய விலை கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.


திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு நெல் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிர் காப்பீடு 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு  கடிதம் அனுப்பபட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஒரு வாரத்தில் 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட நான்கு மடங்கு அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்டை மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவது  தடுக்கப்பட்டுள்ளது. 





அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளை கடந்த ஒன்றரை வருடமாக அனுமதிக்கவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 1 லட்சத்து 86 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் நான்காம் நாளான இன்று புத்தாக்கங்களையும் தொடக்க நிறுவனங்களையும் ஊக்குவித்தல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கூட்டுறவு பங்கு என்கிற தலைப்பில் கொண்டாடப்பட்டது.




இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மாவட்ட ஆட்சியர், திருவாரூர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 1262 பயனாளிகளுக்கு ரூபாய் 3.25 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட  கூட்டுறவு சங்களுக்கு கேடயங்களும் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.


தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழகத்தில் இனி கட்டப்படும் நியாய விலை கடைகளில் கழிவறைகள் கண்டிப்பாக அமைக்கப்படும். கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் நிலவுவதால் கடைக்கு வருகின்ற பெண்களும் நியாய விலை கடை பணியாளர்களும் பயன்படுத்தும் விதத்தில் இந்த கழிவறைகள் அமைக்கப்படும்.. மேலும் வேலைப்பார்த்து கைரேகைகள் தேய்ந்து போனவர்களுக்கு கைரேகை வைப்பதற்கு பதில் கண் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை முதல் முறையாக சோதனை முறையில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் மற்றும் அரியலூர் ஆகிய தொகுதிகளில் துவங்கியுள்ளது. தொடர்ந்து முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று தமிழகத்தில் உள்ள 35,000 நியாயவிலை கடைகளுக்கும் இந்த திட்டம் கொண்டு வரப்படும்” என்று கூறினார்.