திருவாரூர் நகரத்திற்குட்பட்ட சாலைகளிலும் அதேபோன்று திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் கங்களாஞ்சேரி வரை இரவு நேரங்களில் மாடுகள் மற்றும் குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் திருவாரூர் நகராட்சிக்கு தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் குதிரைகள் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மூன்று நாட்கள் கடக்கும் பட்சத்தில் அந்த கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் என்றும்  கால்நடைகள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் சாலைகளை சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து தருபவருக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை கடந்த இரண்டு நாட்களாக பிடித்து நகராட்சி அலுவலகத்திற்குள் பாதுகாத்து வருகின்றனர். 




அதன் அடிப்படையில் இன்று காலை நகராட்சி ஊழியர்கள் வடக்கு வீதி பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று மாடுகளை பிடித்து கயிறு கட்டி இழுத்து வந்தனர். அந்த மாடுகள் அசையாமல் ரோட்டில் நின்று கொண்டு அடம்பிடித்தன. ஒரு வழியாக மாடுகளை இழுத்துச் சென்று நகராட்சியில் அடைத்தனர். அப்போது நகராட்சி அலுவலகத்திற்கு முன்பே மூன்று குதிரைகள் நடு சாலையில் நின்று கொண்டு வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக இருந்தது. இந்த குதிரைகளை கடந்து தான் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் ஒட்டிச் சென்று நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கிழக்காவதுகுடி ஊராட்சிக்குட்பட்ட இடங்களிலும் வண்டாம்பாலை ஊராட்சிக்குட்பட்ட இடங்களிலும் மாடுகள் அதிக அளவில் சாலைகளில் படுத்து உறங்குவதும் சுற்றித் திரிவதுமாக இருக்கின்றன. இதனால் அங்கு அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அப்பகுதி மக்களும் ஊராட்சி நிர்வாகம் மாடுகளை வாடி அமைத்து கட்டிவைத்து மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து மாடுகள் சாலையில் நடமாடுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். 




மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றி தெரிவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். அதுபோன்று ஒரு நாளைக்கு பலமுறை அவசர ஊர்திகள் அந்த சாலை வழியாக திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு செல்கின்றது.


இந்த நிலையில் இந்த மாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நீதிமன்றம் வழியாக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுற்றி திரிவதால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் அந்த சாலையில் இரவு நேரங்களில் உரிய மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் மாடுகள் நிற்பது தெரியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.