தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் நேற்று மாலை அவரது சொந்த மாவட்டமான திருவாரூர் வருகை புரிந்தார். கொரோனா ஊரடங்கு பின்னர் முதல் முறையாக திருவாரூர் மாவட்டம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வரை விமானம் மூலமாக வந்து. அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை திருவாரூர் அடுத்த காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் அதே பகுதியில் அமையவுள்ள கலைஞர் அருங்காட்சியம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனையடுத்து அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்தவர், இன்று காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி சிகிச்சை பிரிவின் வளாகத்தினை திறந்து வைத்து ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
நிகழ்வுகளின் தொடர்ச்சியாக திருவாரூரிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் இல்லத்தை சென்றவர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ள தனது மனைவி துர்கா ஸ்டாலின் பூர்வீக வீட்டிற்கு தமிழக முதல்வர் இன்று தனது குடும்பத்தினருடன் வந்தடைந்தார்.
அப்போது தனது காரில் இருந்து இறங்கிய தமிழக முதல்வர் அங்கு மனு கொடுக்க காத்திருந்த பொதுமக்களிடம் நடந்து சென்று மனுக்களைப் பெற்றார். அதனை தொடர்ந்து திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் சார்பாக அர்ச்சகர்கள் முதல்வருக்கு பூர்ண கும்ப மரியாதையை அளித்தனர்.
தமிழக முதல்வருடன் இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் ஆன உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் உடனிருந்தனர். மேலும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாலை தனது மனைவி துர்கா ஸ்டாலின் பூர்வீக வீடு அமைந்துள்ள திருவெண்காட்டில் இருந்து மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார்.