விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் பெற்ற கொள்முதல் நிலைய அதிகாரி மற்றும் ஊழியர் இருவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர். 

 

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது தங்களது நெல்மணிகளை அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இன்னிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு, கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்கின்றனர் என விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு இனிவரும் காலங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் பெற்றால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்தார். 



இந்நிலையில் திருவாரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர், ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா எடமேலையூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமொழியன் விவசாயி. இவர் தனது அறுவடை செய்த நெல் மூட்டைகளை எடமேலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய எடுத்து சென்றார். அங்கு நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் முருகன் என்கிற முருகையன் (52) மற்றும் மேஸ்திரி கோவிந்தராஜ் ஆகியோர் தனித்தனியே லஞ்சமாக மூட்டைக்கு ரூ.30 வீதம் பணம் கேட்டுள்ளனர். பணத்தை கொடுக்க விருப்பம் இல்லாத மணிமொழியன் இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

 

இதனையடுத்து துணை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் போலீசார் மணிமொழியனிடம் ரூ.10 ஆயிரத்து 700 ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த பணத்தை மணிமொழியன் எடமேலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் முருகையன், மற்றும் மேஸ்திரி கோவிந்தராஜ் ஆகியோரிடம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது கொள்முதல் நிலையத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பட்டியல் எழுத்தர், மற்றும் ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவர்களிடம் கணக்கில் வராத ரூ.19 ஆயிரத்து 730 பணத்தை கைபற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பட்டியல் எழுத்தர் முருகையன், ஒப்பந்த ஊழியர் கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்துறைப்பூண்டி கிளை சிறையில் அடைத்தனர்.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம் ரசிக்க கூடிய மாவட்டம் இவர்களிடம் இருந்து கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது