திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 71 நபர்களுக்கு கொரோனா. 2 பேர் உயிரிழப்பு.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 நபர்களாக இருந்த நிலையில், இன்று தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 597 நபர்கள் வீடுகள், மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 85 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர், இவர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு சென்ற பின்னர் 15 தினங்கள் தனிமையில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் தோற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை 327 நபர்கள் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் கடந்த மூன்று தினங்களாக தடுப்பூசி இல்லாத காரணத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.