தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான துறையின் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக முறையான முறையில் டெண்டர் கோரப்பட்டு அதற்கு ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொறியாளர் அலுவலகத்தில் கொடுத்து அதன் மூலமாக டெண்டர் விடப்பட்டு வருகிறது. திருவாரூர் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமான அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் அறிவிக்கப்பட்ட டெண்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டு வந்த ஒப்பந்தக்காரர்களிடம் மேலிடத்து பரிந்துரையுடன் வந்தால் தான் விண்ணப்பங்களை பெறுவோம் என கூறியதால் அதிகாரிகளுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் பாலத்தில் உயர் கோபுர விளக்கு மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் ஆன்லைனில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருச்சியை சேர்ந்த வசந்த் எலக்ட்ரிகல்ஸ்,  கும்பகோணத்தை சேர்ந்த நாகேந்திரன் என்கிற ஒப்பந்தக்காரர் ஆகிய இருவரும் ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து திருவாரூரில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான பிரிவு பொறியாளர் அலுவலகத்தில் பொறியாளர் வள்ளுவனிடம் விண்ணப்பத்தை கொடுத்தனர்.




அதனை அவர் வாங்க மறுத்ததுடன் மேலிடத்தின் பரிந்துரை இருந்தால்தான் தங்களுடைய விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்து விண்ணப்பத்தை வாங்க மறுத்தாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத இரண்டு ஒப்பந்தக்காரர்களும் அவரது மேஜை மீது விண்ணப்பங்களை வைத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இரண்டு ஒப்பந்தக்காரர்களும் நடந்த விபரங்களை கூறி அலுவலகத்துக்குள் சென்று இரண்டு விண்ணப்பங்களை மேஜையில் வைத்ததை சுட்டிக்காட்டினர். அப்போது அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களிடம் அலுவலகத்துக்குள் நுழையக் கூடாது எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.அதனைத் தொடர்ந்து ஒப்பந்தக்காரர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறி சென்றனர். ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் ஒப்பந்தம் கோரலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் பூர்த்தி செய்து வரப்பெற்ற விண்ணப்பங்களை ஏன் வாங்க மறுத்தீர்கள் என செய்தியாளர்கள் பொதுப்பணித்துறை பொறியாளர் வள்ளுவனிடம் கேட்டபோது அவர் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் சென்று விட்டார். அதன் பின்னர் இரண்டு ஒப்பந்தக்காரர்களையும் அழைத்து பொறியாளர் வள்ளுவன் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.




இந்த நிலையில் பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான பொறியாளர் வள்ளுவன் அவர்களை சந்தித்து விளக்கம் கேட்பதற்காக செய்தியாளர்கள் சென்ற பொழுது செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் உரிய பதிலும் அளிக்காமல் அவரது உதவியாளர் மூலமாக யாரையும் அறைக்குள் அனுமதிக்க வேண்டாம் எனக் கூறி விட்டதாக அவருடைய உதவியாளர் தெரிவித்தார். அரசின் சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஆன்லைன் மூலமாக கோரப்பட்ட நிலையில் அதற்காக விண்ணப்பிக்க வரும் ஒப்பந்ததாரர்களிடம் விண்ணப்பத்தை பெறாமல் அலட்சியமான முறையில் கட்டிட கட்டுமான பொறியாளர் நடந்து கொண்ட விதம் அனைவரின் முகத்தையும் சுளிக்கும்படி இருந்தது இறுதியாக செய்தியாளர்கள் தொடர்ந்து செய்து சேகரித்ததன் காரணமாக இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் இறுதியாக இரண்டு விண்ணப்பங்களையும் பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான பொறியாளர் வள்ளுவன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு இதேபோன்ற செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.