திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றத்திறனாளியை ஓசியில் ஊசி போட வந்ததாக ஒருமையில் பேசியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல கிராமங்களில் இருந்தும் அதேபோன்று அருகில் உள்ள நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இருந்து உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுவதற்கு ஏராளமான நோயாளிகள் தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

 

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கச்சநகரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முருகானந்தம் என்பவர் இன்று  காலை கால் வீக்கம் மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக வெளி நோயாளியாக சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். அப்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு ஊசி போடுவதற்காக  முருகானந்தம் சிறிது தூரம் செல்லவேண்டி இருந்ததால் தனக்கு வீல்சேர் வழங்கும்படி கேட்டுள்ளார் அதற்கு தற்போது வீல் சேர் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



 

இதனையடுத்து அவர் ஊசி போடும் இடத்திற்கு சுவற்றை பிடித்தபடி சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ஆண் செவிலியர் அருள்முருகன் என்பவர் ஓசியில் தானே ஊசி போட வந்த புலம்பமால் இரு என்று தரக்குறைவாக முருகானந்தனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முருகானந்தம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அங்கு சென்றபோது  அருள் முருகன் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியதுடன் செய்தியாளரின் செல்போனையும் பறித்தார். இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் இது குறித்து அருள்முருகனிடம் கேட்டபோது அவர் காவல்துறையாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜிடம் இது குறித்து கேட்டபோது மருத்துவ நிலைய அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளி செவிலியரை முதலில் தரக்குறைவாக பேசியதால்தான் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.