திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பூஞ்சையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகன் காளிதாஸ் வயது 19. இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தண்டலச்சேரி பகுதியில் இருந்து காளிதாஸ் மற்றும் அவருடைய நண்பர் விஜய் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது வேலூர் பாலம் பகுதியில் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது மோதி நிலை தடுமாறி விழுந்ததில் காளிதாஸ் மீது பேருந்து சக்கரம் தலை மீது ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவருடன் பின்னால் அமர்ந்து வந்த மாணவர் விஜய் படுகாயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்து ஓட்டுனர் மீது தவறு உள்ளதா அல்லது மாணவர் மீது தவறு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர் தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் இதுவரை முறையாக அமைக்கப்படவில்லை என்பதும் முறையான வேகத்தடை பல இடங்களில் இல்லாததுமே இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் வாகன ஓட்டுகள் அனைவரும் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும் ஏராளமான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது. ஆண்டுக்கான சாலை விழிப்புணர்வு வாரம் என தமிழக அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டும் பொழுது கவனமாக ஓட்ட வேண்டும் என காவல்துறையின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.