இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில்  கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வானொலியை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நகரில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டு திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாப்பா சுப்ரமணியனின் மூத்த மகன் பாப்பா வெற்றியழகன் என்பவர் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் பலர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது பாப்பா வெற்றியழகன் அவரது சொந்த ஊரான பெரும்பண்ணையூருக்கு வருகை தந்தார்.

 

இந்த நிலையில் கிராம மக்கள் அவருக்கு செண்டை மேளம் முழங்க அவரை வரவேற்றனர். மேலும் பெரும்பண்ணையூர் கடைத் தெருவில் இருந்து அவரது வீடு வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து அழைத்து வந்தனர். வழிநெடுகிலும் கிராம மக்கள் அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர். பதிலுக்கு பாப்பா வெற்றியழகன் அவர்கள் காலில் விழுந்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார். மூதாட்டிகள் அவரை கையால் கன்னத்தை அள்ளி முத்தமிட்டு வாழ்த்தினர்.



 

மேலும் வழிநெடுகிலும் மலர் தூவியும் மாலை அணிவித்து அவரை கிராம மக்கள் வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும் வான வேடிக்கைகள் நிகழ்த்தியும் உற்சாகமாக அவரை வரவேற்றனர். தொடர்ந்து அவரது அம்மா மற்றும் அப்பா காலில் விழுந்து அவர் ஆசி  வாங்கினார். தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் அவர் பேசுகையில் எனது மீது கிராம மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு மிக்க நன்றி என்று உணர்ச்சி பொங்க கண்ணீர் மல்க பேசினார்.

 

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “ எங்கள் கிராமத்தில் பிறந்த ஒருவர் லண்டன் மாநகரத் தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலராக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எங்களிடம் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு ஆசி வாங்கியது அவர் பெருந்தன்மையை காட்டுகிறது. அவர் லண்டன் தேர்தலில் வெற்றி பெற்றது எங்கள் ஊருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே பெருமை” என்று கூறினர்.



 

இதுகுறித்து பாப்பா வெற்றியழகன் கூறுகையில், “நான் லண்டனில் நடைபெற்ற தேர்தலில் செம்ஸ் போர்டு சிட்டி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டதை விட தற்போது எங்கள் ஊர் மக்கள் எனக்கு வரவேற்பு அளித்த போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தையின் சமூக சேவையை பார்த்து தான் எனக்கு தேர்தலில் இன்று மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆசை வந்தது அவர்தான் இதற்கெல்லாம் அடித்தளம் போட்டது” என கண்ணீர் மல்க கூறினார்.