திருவாரூரில் பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டவர்களை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சாளுவம்பேட்டையில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வடுவூர் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் வலங்கைமான் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி ஒரு சமூகத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் பையில் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின்படி  எதிர்தரப்பை சேர்ந்த பிரேம்குமார், கரண், மணிகண்டன், செந்தில்குமார் கௌதம் ஆகிய ஐந்து பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 




அதேபோன்று எதிர் சமூகத்தினர் மீதும் 3க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு அமைப்பின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள் காவல்துறையினர் தங்கள் தரப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்று கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே  தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள்  தரையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் கூட்டத்தில் கமலேஷ் என்பவர் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் போராடி மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தரையில் ஊற்றினர்.




அதனைத் தொடர்ந்து 10 பேரை மட்டும் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போர்க்களமாக காட்சியளித்தது. மேலும் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண