திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு மதுரை மண்டல தலைவர் வேதராஜ் தலைமையில்  நடைபெற்றது. இதில்  தமிழகம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆம்புலன்ஸ்களை கூடுதலாக இயக்காமல் இருக்கும் 108 ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்து அல்லது ஆம்புலன்ஸ் தேவைப்படும் பகுதிக்கு புதிய லொகேஷன் ஏற்படுத்துகிறோம் என்கிற பெயரில் ஏற்கனவே ஒரு பகுதியில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ்களை புதிய லொகேஷனுக்கு எடுத்து வருவதை GVK-EMRI நிர்வாகம் கைவிட வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்பு பேறுகால விடுப்பு எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் சிக்கும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களின் மருத்துவ சிகிச்சை முடிந்து பணி திரும்பும் காலம் வரையிலும் மேலும் அந்த விபத்திற்கான நாட்களுக்கும் சேர்த்து சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மருத்துவ விடுப்பு பேறுகால விடுப்பு எதிர்பாராமல் ஏற்படும் விபத்திற்காக விசாரணை மற்றும் பல காரணங்களுக்காக விசாரணை என்று தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்படும் தொழிலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவாக வாரக் கணக்கில் பணி வழங்காமல் அந்த தொழிலாளர்களுக்கு சம்பள வெட்டு நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது. எனவே நிர்வாகத்தின் இத்தகைய தொழிலாளர் விரோத சேவை விரோத சட்டவிரோத செயல்களுக்கு எதிராக தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 2k ன் கீழ் வழக்கு பதிவது மற்றும் போராட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் இந்த மாவட்ட மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிறைவேற்றாத பட்சத்தில் தொழிலாளர் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 




குறிப்பாக இரவு நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் எண்ணிக்கையை குறைத்து இயக்குவதாகவும் இதனால் இரவு நேரங்களில் விபத்தில்  சிக்கி அவசர மருத்துவ உதவி தேவைப்படும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 6500  ஆண், பெண் தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ்களில் பணியாற்றுகின்றனர் எனவும் அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் நடந்து கொள்ளும் நிர்வாகத்தை கண்டித்தும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதில் திருவாரூர் மாவட்ட தலைவர் ஐயப்பன், மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மே 17 இயக்கம் மக்கள் அதிகாரம் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.