மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இந்திய வங்கிக்கு வைத்த கோரிக்கை நிறைவேறியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியன் வங்கி கடந்தாண்டு வெளியிட்டு இருந்த பணி நியமன வழிகாட்டல்களில் கருவுற்ற காலத்தில் மகளிருக்கு பணி நியமனங்கள் மறுக்கப்படுகிற அம்சம் இடம் பெற்று இருந்தது. பெண் தேர்வர் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில், பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாக தகுதி அற்றவர் என்று கருதப்படுவார். பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவர் இடம் இருந்து உடல் நல தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்.

 





 

என்ற அந்த வழிகாட்டல் அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை எனவும், அது கைவிடப்பட வேண்டுமெனவும் இந்தியன் வங்கி தலைவர் திரு சாந்திலால் ஜெயின் அவர்களுக்கு ஜூன் 12 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.  இதற்கு ஜூன் 16 அன்று பதில் அளித்த இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார் "சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்த அடிப்படையிலேயே பணியில் சேர கால அவகாசம் சிலருக்கு தரப்பட்டது" என்று பதில் அளித்திருந்தார். 1987 வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையின் சுற்றறிக்கை ஒன்றையும் குறிப்பிட்டு இருந்தார்.  எனவே மீண்டும் ஜூன் 21 அன்று இந்தியன் வங்கி தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தேன். 

 


சம்பந்தப்பட்ட மகளிர் ஊழியர்கள் வேண்டுகோளின் அடிப்படையிலேயே பணி நியமனங்கள் சில நேரங்களில் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்ற விளக்கத்திற்கும், பணி நியமன வழி காட்டல்களுக்கும் ஒன்றுக்கொன்று பொருந்தாத முரண் இருப்பதை சுட்டிக் காட்டி பணி நியமன வழிகாட்டல்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அக் கடிதத்தில் எழுதி இருந்தேன்.  அதற்கு மீண்டும் ஜூலை 4, 2022 அன்று இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர்  அஸ்வினி குமார் அவர்களிடம் இருந்து பதில் வந்துள்ளது. 

 


அதில் "எங்களது முந்தைய கடிதத்தில் இப்பிரச்னை மறு பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தோம். அதன்படி பரிசீலனை மேற்கொண்டு, இனி தவறான பொருள் கொள்தல் நிகழ்ந்து விடக் கூடாது என்று அந்த விதியை நீக்கி இருக்கிறோம். இதுவரை எந்த மகளிரும் இந்தியன் வங்கியில் பணி நியமனம் மறுக்கப்பட்டதில்லை என்றும் வங்கி பாலின பாரபட்ச நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தோடு இப் பிரச்னை முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு உளமார வேண்டுகிறோம்." என இருந்தது. எனவே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியன் வங்கிக்கு நன்றி. இந்திய நாட்டின் பெருமை மிக்க அரசு வங்கியான இந்தியன் வங்கியின்  பங்களிப்பு மீது அளப்பரிய மரியாதை எப்போதும் உண்டு. வங்கி மென்மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்.  இந்தியன் வங்கியில் எட்டப்பட்டுள்ள தீர்வு பாலின பாரபட்ச நடைமுறைகளுக்கு எதிரான இன்னொரு முன்னோக்கிய நகர்வு.” என தெரிவித்துள்ளார்.

 

 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண