பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடை பெண் பணியாளரிடம் தவறாக உரையாடிய கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன், தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்கவே விடுமுறை நாள் பார்த்து தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள நியாயவிலைக்கடை பணியாளர்களை பாகுபாடாக நடத்துகிறார். குறிப்பாக பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டியதை பார்த்து அதில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் பதவி உயர்வு அளிக்காமல் இருக்க சதி செயல்களில் இறங்கி விடுகிறார். பெண் பணியாளர்களிடம் பாலியல் இம்சைதரும் வகையில் பேசுகிறார். இவ்வாறு கீழ்தரமாக நடந்து கொள்ளும் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளரை தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரது தவறை சுட்டிக்காட்டி சரி செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் வரை கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் சரி செய்யாமல் இருந்தது தான் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. ஆய்வு செய்வதில் தவறு இல்லை. ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறை வந்தது முதல் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆய்வு என்ற பெயரில் அர்த்தமற்ற வகையில் ஆய்வு செய்து பணம் பறிக்கும் முயற்சியில் அதிகாரிகள் செயல்படுகின்றனர்” என்று கூறினார்.
மேலும், சரியான எடையில் பொருளை கொடுக்காமல் காந்தியே கடையை நடத்தினாலும் குறைகள் இருக்கத்தான் செய்யும் என்றவர் எதிர்த்து போராடினால் ஆய்வு செய்வார்கள். அரசுக்காக ஆய்வு செய்திருந்தால் கடத்தலே நடத்து இருக்காது. அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதையே ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்தால் ஆய்வின் உண்மைதன்மையை கண்டுபிடிக்க முடியும் என்றார். ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டினார். ரேஷன் கடைகளில் அதிகாரிகள் நடத்தும் ஆய்வு என்பது அர்த்தமற்றது என கு. பாலசுப்பிரமணியன் பகிரங்க குற்றம் சாட்டினார்.