தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக காலநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை மதுரை நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் அதிக அளவில் காய்ச்சலால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கென்று தனி வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு அந்தந்த துறை அதிகாரிகள் அவற்றை கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அந்த வகையில் 33 நபர்கள்  வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் மூன்று பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.



 

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 30 நபர்களில் நேற்று ஒரு நாளில் மட்டும் 13 நபர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு குறைந்தது 8 முதல் 20 நபர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் குழந்தைகளும் அடங்குவர்.மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வெளி நோயாளிகளுக்கான பிரிவிலும் தொடந்து சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 வரை இருக்கின்றது.குறிப்பாக நேற்று ஒரே நாளில் 60 பேர் வெளி நோயாளிகளாக காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் வந்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அது மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூட கூடிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் முககவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.மேலும் தமிழக முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.