திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அவரது உறவினரான புள்ளமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகிலன் (வயது 19) ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அவரது வீட்டுக்குள் புகுந்த முகிலன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு உள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்ப்பதற்குள் அங்கிருந்து முகிலன் தப்பி ஓடி விட்டான்.
அதனை அடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதனை அடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து முகிலன் பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர் அப்போது முகிலனின் பெற்றோருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த எறும்பு மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து வடபாதிமங்கலம் காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் முகிலன் மீது போட்டோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதே போன்று சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை வழங்கிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல் துறை சார்பில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் காவல்துறை உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தேவையான அனைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதே போன்ற விஷயங்களில் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமே தவிர தற்கொலை என்பது தீர்வு அல்ல என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..