மொஹரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள், இந்துக்கள் இணைந்து தீமிதி திருவிழாவை கொண்டாடினர். சர்க்கரை பொங்கல் படைத்தும் வழிபட்டனர். நபிகளின் பேரன் இமாம் உசேன் கொல்லப்பட்ட தினத்தை, துக்க நாளாக இஸ்லாமியர்கள் மொகரம் தினத்தை அனுசரித்து வருகின்றனர். தஞ்சாவூர் அருகே 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமியர்களின் பண்டிகையான மொஹரம் பண்டிகையை ஒரு கிராம மக்கள் பத்துநாட்கள் விரதம் இருந்து, தீயில் இறங்கி மிகுந்த பயபக்தியுடன் அனுசரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் ஆண்டு தோறும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொஹரம் பண்டிகையின் போது இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காசவளநாடு புதூர் கிராமத்தில் நான்கைந்து தலைமுறையாக அல்லாவுக்கு விழா எடுக்கும் இந்துக்கள், இதற்காக பத்து நாளைக்கு முன்பாக ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் (ஊரின் பொதுவான இடம்) உள்ள “அல்லா சாமி” என்றழைக்கப்படும், கை உருவம் கொண்ட பொருட்களை தனியாக எடுத்து பந்தல் அமைத்து, விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி, மொகரம் திருநாளில் இரவு முழுவதும் வீடு வீடாக வீதியுலா சென்று மறுநாள் காலையில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி கடந்த 10 தினங்களுக்கு முன் அல்லா சாமியை வெளியே எடுத்து வைத்தனர். தினமும் காலை, மாலை இருவேளையும் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை இரவு அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச்சென்றனர். அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லா சாமியை கிராம மக்கள் வரவேற்றனர். வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி சென்றது.
பின்னர் மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அங்கு தீமிதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது அல்லா சாமியை தூக்கி வந்தவர்கள் முதலில் தீயில் இறங்கினர். இதைத் தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த காத்திருந்த ஏராளமானோர் தீயில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த ஆர்.ரவிச்சந்திரன் கூறுகையில், இஸ்லாமியரின் பண்டிகையான மொஹரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம், வைடப்பக்கம் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.
Weather update : தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை தெரியுமா?