கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் முதல் அலை ஓய்ந்த பிறகு  கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பின் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு, ஊரடங்கு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான ஆணையை அரசு பிறப்பித்தது . அதன் அடிப்படையில் கடந்த  ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று பள்ளி மாணவர்களுக்கும் ஒரு பள்ளி முதல்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும்  கொரோனா பரவலின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதால், பள்ளி வழக்கம் போல செயல்பட சுகாதார துறையினர் அனுமதித்துள்ளனர். மயிலாடுதுறை தனியார் மெட்ரிக். பள்ளி மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பள்ளி முதல்வருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது, அதனையடுத்து மாணவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.




இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அந்த மாணவருடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானதில், பள்ளி முதல்வருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது.  இதேபோல, மயிலாடுதுறை நகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவருக்கும் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி, அவ்வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் ரேண்டம் அடிப்படையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 117 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மற்ற யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. அதனால் அப்பள்ளியும் வழக்கம் போல் செயல்படுகிறது.



மேலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆயங்குடி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து சக மாணவர்களிடம் பரிசோதனை செய்ததில் யாருக்கும் மற்ற மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டாததால் அப்பள்ளியும் தொடர்ந்து செயல்பட சுகாதார துறையினர் அனுமதித்துள்ளனர்.