தஞ்சாவூர்: ஆசிரியர்கள் சுயநலமில்லாமல் உழைப்பதற்கு காரணம். வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால்தான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டி பேசினார்.
தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருதும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.;
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) மு.சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிகளில் மாணவர்களுக்கு உணர்வுபூர்வமாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏதாவது பாராட்டு விழா நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினேன். அதன்படி தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இதற்காக முயற்சி எடுத்த முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் இங்கு திரண்டுள்ள அறிவுசார்ந்த ஆசிரியர்கள் அடங்கிய கூட்டத்துக்கு வரும்போது, நான் ஒரு நூலகத்துக்குள் நுழைந்த உணர்வை பெற்றுள்ளேன். அறிவுசார்ந்த ஆசிரியர்கள் முன் உரையாற்றுவதை நான் பெருமையாக உணர்கிறேன். அறிவுசார்ந்த மாணவர்களை உருவாக்க தினமும் உழைத்துக் கொண்டிருக்கிற ஒரு இனம் ஆசிரியர்கள் தான் என பெருமையாக சொல்லலாம்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், அதே போல் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையே உள்ள உறவு என்பது ஒரு உணர்வுபூர்வமான உறவாகும். தமிழ் சமுதாயத்தை வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த ஆசிரியர்கள் தான் காரணம். ஆசிரியர் பணி என்பது வாழ்வியலை செம்மைப்படுத்தக்கூடியவர்கள் தான் இங்கு அமர்ந்துள்ளீர்கள்.
தமது குழந்தைகள் என்னப் படிக்கிறார்கள், எப்படி படிக்கிறீர்கள் என்பதை பார்க்காமல், ஒரு சுயநலமில்லாமல், தன்னுடைய வகுப்பறையில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வேண்டும் என உழைக்கும் ஆசிரியர்கள் சுயநலமில்லாதவர்களாக உள்ளார்கள். அவர்களை இந்த நேரத்தில் பாராட்டுவது பொருத்தமாக இருக்கும் என்றார்.
விழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 1,700 பேருக்கு சான்றிதழ்களும், 150 பேருக்கு ஒளிரும் ஆசிரியர்கள் விருதும் வழங்கப்பட்டது.
மேலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சுமித்ரா, தஞ்சாவூர் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குழந்தைசாமி, வரகூர் அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி மோனிகா எழுதிய நூல்கள் அமைச்சரால் வெளியிடப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் மெ.கோவிந்தராஜ் நன்றி கூறினார்.