தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு பிரித்து கொடுத்த நிலையில் மற்ற 5 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதில் 2 பேர் புதுமுகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகளை அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளது. மற்ற 5 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாபநாசம் தொகுதியில் துரை.சண்முகபிரபு, திருவிடைமருதூர் தொகுதியில் இளமதி சுப்பிரமணியன், ஒரத்தநாடு தொகுதியில் மா.சேகர், பேராவூரணி தொகுதியில் கோவி.இளங்கோ, பட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி. சேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பாபநாசம் துரை. சண்முகபிரபு மற்றும் பேராவூரணி கோவி. இளங்கோ ஆகியோர் புதுமுகங்கள்.
அதிமுக சார்பாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மா.சேகர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ,ஜானகி, ஜெயலலிதா ஆகியோருடன் கட்சி பணியாற்றியவர். பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு திருமங்கை என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.
இவர் ஒரத்தநாடு பேரூராட்சி தேர்தலில் மூன்று முறை வெற்றி பெற்று சேர்மனாக தொடர்ந்து இருந்து வருகிறார். அதிமுகவில் மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும், அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக தற்பொழுது இருந்து வருகிறார். தற்போது இவர் அதிமுக ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை.சண்முகப்பிரபு முன்னாள் எம்எல்ஏ துரைக்கண்ணுவின் மகன். இவர் சட்டமன்ற தேர்தலில் புதுமுகமாக அறிமுகமாகிறார். திருவிடைமருதூர் தொகுதியில் இளமதி சுப்பிரமணியன், பேராவூரணி தொகுதியில் கோவி.இளங்கோ, பட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி. சேகர் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
