திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புனவாசல் அருகில் உள்ள மாதா கோவில் கோம்பூர் பாலம் கடந்த 1985 ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாலம் கடந்த மூன்று வருட காலமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இரும்பு பாலத்தின் மேல் உள்ள கான்கிரீட் உடைந்து இருப்பதால் அதில் சவுக்கு கம்புகளை அடுக்கி வைத்து கட்டி அதில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

 

இந்த பாலத்தின் வழியாக கிளியனூர் காக்கையாடி கோம்பூர் மாதாகோவில் அன்னுக்குடி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பேருந்து நிறுத்தம் சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வடபாதிமங்கலம் ஊராட்சி அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் போன்றவற்றிற்கு வந்து செல்கின்றனர்.

 

மேலும் இப்பகுதி மக்கள் மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்களில் இந்த பாலத்தை கடந்து சென்று வந்த நிலையில் பாலத்தில் கம்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் இதில் தற்போது பயணிக்க முடியவில்லை.இதன் காரணமாக உடல் நிலை சரி இல்லாதவர்கள் கூட நடந்து இந்த பாலத்தை கடக்க வேண்டிய சூழல் இருக்கிறது.



 

சமீபத்தில் ஆறு மாத கைக்குழந்தையை  தூக்கிக்கொண்டு சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக வந்த பெண் ஒருவர் தடுமாறி பாலத்தில் விழுந்துள்ளார். குழந்தையை அருகிலிருந்தவர்கள் காப்பாற்றிய நிலையில் அந்த பெண் மட்டும் கீழே விழுந்து காயம் பட்டதாக கூறப்படுகிறது.அதே போன்று மிதிவண்டியை தள்ளிக்கொண்டு இந்த பாலத்தை கடந்த சிறுவன் பாலத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கம்பு முறிந்ததால் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

எனவே இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய கான்கிரிட் பாலமாக கட்டித் தர வேண்டும் என இப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வந்து இந்த பாலத்தை ஆய்வு செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.