திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது மாதிரி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை கடந்து தான் மும்மதங்களுக்கும் முக்கிய வழிபாட்டுத் தலமாக கருதப்படும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயம் போன்றவற்றிற்கு ரயில் மூலம் செல்ல வேண்டும்.

 

மாதிரி ரயில் நிலையத்தில் குடிநீர் கழிவறை இணைய வசதி ஏடிஎம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் திருவாரூர் ரயில் நிலையம் அடிப்படை வசதிகள் இன்றி மாதிரி ரயில் நிலையத்திற்கு உரிய எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில் காணப்படுகிறது. மேலும் ரயில் வசதி குடிநீர் சுகாதரமான கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாமல் இந்த ரயில் நிலையம் இருக்கிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் போன்றவை இங்கு இல்லை என்று கூறப்படுகிறது.



 

மாதிரி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகியும் பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இன்றி சாதாரண ரயில் நிலையம் போன்று திருவாரூர் ரயில் நிலையம் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். அதேபோன்று காலை நேரத்தில் சென்னைக்கு செல்வதற்கான ரயில் வசதி எதுவும் இல்லை என்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறை சுகாதார மற்ற முறையில் நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் ரயில் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

 

இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறுகையில், "திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் வசதி குறைந்து வருகிறது. மாலை நேரங்களில் விழுப்புரத்தில் ரயில் ஏறினால் திருவாரூரில் இறங்கிவிடலாம். இப்போது மயிலாடுதுறையில் வந்து வேறு ரயில் மாறி வர வேண்டிய சூழல் இருக்கிறது. நிறைய இணைப்பு ரயில்களை இப்பகுதிக்கு கொடுக்கலாம். தஞ்சாவூரில் நிற்கின்ற ரயில்களை காரைக்கால் வரை இயக்கினால் அதன் மூலம் திருவாரூர் பயன்பெறும். குறிப்பாக பயணிகளுக்கு மதிய நேரத்தில் குறைவான ரயில் வசதிகளே உள்ளன.

 

அதுபோன்று திருவாரூரில் இருந்து காலை நேரத்தில் சென்னைக்கு செல்வதற்கு ரயில் வசதி இல்லை. எனவே காரைக்காலில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ரயில் கண்டிப்பாக வேண்டும். பழைய ரயில் நிலையத்தையும் புதிய ரயில் நிலையத்தையும் இணைக்கும் சாலை பணி மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று அந்த பகுதியில் உள்ள காடுகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த காடுகளை அழித்து சுத்தம் செய்ய வேண்டும். நிறைய மரக்கன்றுகளை நட வேண்டும். முதியோர்கள் பயணிக்கிற அளவில் சுரங்கப்பாதைகளை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று லிப்ட் ஒரு பக்கம் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது அதையும் இரண்டு பக்கமாக அமைத்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். வேதாரண்யம் அகஸ்திய ம்பள்ளியில் இருந்து இயக்கப்படும் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டித்தால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கொடுக்கும் நான்கு கவுண்டர்களில் இரண்டு கவுண்டர்கள் மட்டுமே இயங்கி வருகிறது.



 

இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறுகையில் திருவாரூர் ரயில் நிலையம் 33 வழித்தடங்களுக்கு ஏற்றதாக

அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 33 வழித்தடங்களுக்கான கட்டமைப்பு இங்கே இருக்கிறது, ஆனால் பயணிகள் வந்து செல்வதற்குரிய எவ்வித முகாந்திரமும் இல்லை. அடிப்படையான குடிநீர் வசதி இல்லை. நாள்தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவ றையை தூய்மை பணியாளர்கள் மூலம் அடிக்கடி சுத்தம் செய்தால் மட்டுமே நோய் தொற்று இல்லாமல் இருக்கும். மேலும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பராமரிப்பதற்குரிய சரியான அமைப்பு இங்கு இல்லை.டிக்கெட் கவுண்டரில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் வேறு வழியில்லாமல் ரயிலில் செல்வது போல பயணிகளை மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள்" என்று அவர் கூறினார்.