கடந்த மே மாதம் 27ம் தேதி ஊட்டியில் உள்ள அண்ணா உள் விளையாட்டரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் தென்னிந்திய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒற்றைக்கம்பு இரட்டைக் குச்சி வால் வீச்சு போன்ற பிரிவுகளில் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

 

இந்த போட்டியில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 15 மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் 10 பேர் இந்த போட்டியில் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். குறிப்பாக ஐந்து மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று வரும் அக்டோபர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பங்கு பெறுவதற்கு தேர்வாகி உள்ளனர். இந்த 15 மாணவர்களும் வண்டாம்பாலை பகுதியில் ராமச்சந்திரன் என்கிற பயிற்சியாளரிடம் சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். இவர் ஏழை, எளிய அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

இந்த போட்டியில் தனித்திறன் ஒற்றைக்கம்பு பிரிவில் ஆண்டிப்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் முகமது பைசல், சூரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அஜய்வர்மன், அரசு உதவி பெறும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் சுபிக்ஷா, தனியார் பள்ளியில் பயிலும் வெற்றிமாறன் அபிஷேக் ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்று தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச சிலம்ப போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

 

மேலும் இந்த போட்டியில் நன்னிலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் படிக்கும் சந்தோஷ் தனித் திறன் ஒற்றைக் கொம்பு சுற்றுதல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் அகிலன் இரட்டைக் குச்சி சுற்றும் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று சாதித்துள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் பயின்று சிலம்ப போட்டியில் சாதித்து சர்வதேச அளவிலான போட்டியில் பங்குபெற தாய்லாந்து செல்லவிருக்கும் அரசு பள்ளி மாணவர்களான முகமது பைசல் மற்றும் அஜய்வர்மன் ஆகியோரது பெற்றோர்கள் விவசாயக் கூலிகளாக இருந்து வருகின்றனர்.

 

மேலும் தாய்லாந்து சென்று சர்வதேச அளவிலான போட்டியில் பங்கு பெறுவதற்கான வசதி கூட இல்லாத நிலையில் இருந்து வருவதாகவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்கிற கோரிக்கையை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும்  முன்வைக்கின்றனர். ஊட்டியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலிமிருந்து 1200 மாணவ, மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர். இதில் தமிழகம் சார்பில் தங்கப்பதக்கம் பெற்று 20 மாணவ, மாணவிகள் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பங்கு பெற உள்ளனர்.



 

தமிழர்களின் பாரம்பரிய கலையாக கருதப்படும் சிலம்ப கலையை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் பயின்று சிலம்பத்தில் சாதித்துள்ள ஏழை, எளிய பின்புலம் உள்ள மாணவ மாணவிகளுக்கு தாய்லாந்து செல்வதற்கான பயணச் செலவிற்கு கூட பணம் இல்லாத நிலை உள்ளது என்றும் தங்களுக்கு அரசு உதவ முன்வரும் பட்சத்தில் மென்மேலும் தங்களால் சிலம்பத்தில் சாதிக்க முடியும் என்றும் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியிலும் தங்கப்பதக்கம் வெல்ல முடியும் என்று இந்த மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.