திருவாரூரில் உள்ள ராபியம்மாள் அகமது மொய்தீன் மகளிர் கல்லூரியில் 19 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உரையாற்றியபோது, ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் தெரிவித்ததால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

திருவாரூரில் உள்ள ராபியம்மாள் அகமது மொய்தீன் மகளிர் கல்லூரியில் 19 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 620 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது... ”வேலைவாய்ப்பு இந்தியாவில் கொட்டிக்கிடக்கிறது வேலை செய்யத்தான் ஆட்கள் இல்லை. இந்தி படித்துவிட்டால் இந்தியா முழுவதும் சென்று வேலை செய்து விடலாம் எனக் கூறுவார்கள், இந்திக்காரர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு வேலை கூட பார்க்க ஆள் இல்லை.அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் உணவகம், கட்டுமானம் என அனைத்து பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால் வட மாநிலத்தில் வேலை இல்லை என்பது தெரிகிறது.தமிழகத்தில் வேலை கொட்டிக்கிடக்கிறது என்பது தெரிகிறது


இந்தி படித்துவிட்டால் இந்தியா முழுவதும் வேலை கிடைத்து விடும் என்பது பொய் ஆகிவிட்டது. வேலை வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தவில்லை இங்கே இருப்பவர்கள் எல்லாம் சோம்பேறி ஆகிக் கொண்டிருக்கிறார்கள் இது மறுக்க முடியாத உண்மை. 100 நாள் வேலைத்திட்டம் என்பது ஒரு அற்புதமான திட்டம் அந்தத் திட்டத்தை சோம்பேறிகளாக  மரத்தடியில் பேசிக்கொண்டு வேலை செய்யாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்கள். இன்னும் 20 வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு கூலிகளாக வந்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள் முதலாளிகளாக இருப்பார்கள் இன்று முதலாளிகளாக இருக்கக்கூடிய தமிழர்கள் கூலி காரர்களாக இருப்பார்கள் இது வருத்தப்பட வேண்டிய செய்தி.




பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன இதற்குக் காரணம் இன்டர்நெட். இன்டர்நெட்டில் பல நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதே போன்று பல தீய விஷயங்களும் உள்ளன தீய விஷயங்களை நோக்கி நாம் சொல்கின்றோம் அதனை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தீய விஷயங்களில் இருந்து நாம் விடுபட வேண்டும். பெண்கள் அமைதியாக இருந்தால் சமூகம் அமைதியாக இருக்கும் அணுகுண்டை விட சக்தி வாய்ந்தவர்கள் பெண்கள் ஒரு பெண்ணால் மட்டுமே பலவித பரிமாணங்களில் பரிணமிக்க முடியும். இருக்கும் கடவுளை விட்டுவிட்டு இல்லாத கடவுளை தேடி செல்ல வேண்டாம் தாய்க்கு இணையான கடவுள் இருக்க முடியாது. வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்த காலத்தில் தற்கொலை சம்பவங்கள் இல்லாத நிலையில்,தற்பொழுது வீட்டிற்கு ஒரு குழந்தை என்ற நிலை உருவாகியுள்ளது இதனால்தான் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன” என பேசினார்.