திருவாரூர் மாவட்டம் 4 நகராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 534 ஊராட்சிகள், என பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்ட மாவட்டமாகும். இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறங்கள் உள்ளன. குறிப்பாக இதுவரைக்கும் பல கிராமங்களில் அரசின் சார்பில் கட்டித் தரப்பட்டுள்ள குடியிருப்புகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த கலைஞர் வீடு கட்டும் திட்டம் அதேபோன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா வீடு கட்டும் திட்டம் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகளில் இதுவரை மக்கள் வசித்து வருகின்றனர். அதே நேரத்தில் அந்த வீடுகள் எப்பொழுது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளதால் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் அல்லது தற்போது உள்ள வீடுகளை பராமரித்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் நாள்தோறும் கோரிக்கை மனுக்களாக அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு புதிய வீடுகளோ அல்லது வீடுகளை பராமரித்து தரவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.




அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் கீழக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வீராக்கண்ணு கிராமத்தில் 30 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வசிக்கும் வீடுகள் அனைத்தும் பல்வேறு விதங்களில் சேதமடைந்துள்ளது. ஒரு சில வீடுகளில் சுவர்கள், ஒரு சில வீடுகளின் மேற்கூரைகள் என ஆங்காங்கே இடிந்து காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் கை குழந்தைகளுடனும், வயதான பெரியவர்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் இந்த வீட்டில் யாரும் வசிக்க முடியாத நிலை உள்ளதாகவும் வேதனையுடன் இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அளித்தும் கோரிக்கை மனு வழங்கியும் எவ்வித பயனும் இல்லாத நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.




தற்பொழுது கிராம நிர்வாக அலுவலர் புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்ற நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு எங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிய வீடுகள் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடனடியாக மாற்று வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற மழைக்காலத்தில் நாங்கள் உயிருடன் இருப்போமா இல்லையா என்ற நிலையில் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழலில் இருப்போம் ஆகையால் தமிழகத்தில் புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்கள் கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க கிராம மக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண