நாய்களிடம் சிக்கி கொண்ட மயிலை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. 

Continues below advertisement


நாடு முழுவதும் தேசிய பறவையான மயில் என்பது அழிந்து வரக்கூடிய ஒரு இனமாகவும் அதே சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பறவை இனமாகவும் இருந்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சாகுபடி என்பது பெரும்பான்மையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் அருகில் உள்ள இடங்களில் இந்த மயில்கள் என்பது அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிடும் காலங்களில் மயில்கள், அதனை தங்களுக்கு இரையாக பயன்படுத்திக் கொள்வதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக சில விவசாயிகள் மயில்களுக்கு விஷம் வைப்பதனாலும், அடித்து துன்புறுத்துவதனாலும் மயிலினம் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நொடிகளை எடுத்து தேசிய பறவையான மயிலினத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாய்களிடம் சிக்கிக்கொண்ட மயிலை ஆறாம் வகுப்பு படிக்கும்  சிறுவன் சமூக அக்கறையுடன் காப்பாற்றி இருப்பது என்பது பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டை பெற்று வருகிறது.




திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சின்னகரம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் 11 வயதுடைய தீனதயாளன். இவர் கும்பகோணம் லிட்டில் பிளவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுவன் வீட்டிற்கு அருகில் உள்ள வயல் வெளியில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு ஒரு பெண் மயிலை கடித்து சித்ரவதை செய்வதை பார்த்துள்ளான். இதனைப் பார்த்த சிறுவன் தீனதயாளன் உடனடியாக நாய்களை விரட்டிவிட்டு அந்த மயிலை நாய்களிடமிருந்து காப்பாற்றியதுடன் அந்த மயிலை எடுத்துக்கொண்டு தனி ஆளாக வலங்கைமான் காவல் நிலையத்திற்கு வந்து மயிலை நாய் கடித்து விட்டது என்று கூறியதுடன் அதனை தான் காப்பாற்றி இங்கு கொண்டு வந்ததாகவும் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் மயிலை ஒப்படைத்துள்ளார். 




சிறுவனின் இந்த செயலைக் கண்டு ஆச்சரியப்பட்ட காவல்துறையினர்  திருவாரூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுவனிடம் இருந்து மயிலை பெற்றுக் கொண்டனர். மயிலுக்கு கால்நடை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்த பின்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்படும் என்று திருவாரூர் வனத்துறையினர்  தெரிவித்தனர். இந்த சிறுவயதில் ஒரு உயிரினத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையும் அதேசமயம் அது தேசிய பறவை என்பதால் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்கிற அறிவும் உடைய அந்த சிறுவனை வலங்கைமான் காவல்துறையினர் மட்டுமல்லாது அப்பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 


மேலும் 11 வயதுடைய சிறுவன் சமூக அக்கறையுடன் மயிலை காப்பாற்றி உள்ள சம்பவம் என்பது அப்பகுதியில் உள்ள பலரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பதுடன் அவர்களுக்கு தேசிய பறவையான மயிலை பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


எனவே திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் மாவட்டம் முழுவதும் விளை நிலங்களுக்கு  அருகில் வசிக்கும் மயில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.