காவிரி டெல்டாவில் நெல் சாகுபடி செய்து குறைந்த வருவாய் ஈட்டி வருகின்ற விவசாயிகள் மாற்று சாகுபடி திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என தொடர்ந்து அரசும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தாலும் அதனை ஒருசில விவசாயிகள் மட்டுமே கடைபிடித்து வெற்றியாளர்களாக பிறருக்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் திருவாரூர் அடுத்துள்ள அரசவனங்காடு கிராமத்தில் 10 ஏக்கர் விளை நிலத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார் கணேஷ் கமலக்கண்ணன் என்கிற இளம் விவசாயி. பிகாம் பட்டதாரியான இவர் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து தனது நிலத்தின் ஒரு பகுதியில் நெல் சாகுபடியோடு சேர்த்து சுமார் 2 ஏக்கர் பரப்பில் மீன் பண்ணை அமைத்து அதன் கரையோரங்களில் தென்னை மரக்கன்றுகளை நட்டார். இந்த தொடக்கம் அவருக்கு பல்வேறு சிந்தனையை தோற்றுவித்து இரண்டு ஏக்கரில் தொடங்கிய அந்த மீன் பண்ணை தற்போது 5 ஏக்கராக விரிவடைந்துள்ளது. அதற்கேற்ப நடப்பட்ட தென்னை மரங்கள் இன்று 100 ஆக அதிகரித்துவிட்டது.




மீன் பண்ணைக்கு தேவையான தீவன செலவைக் குறைக்க கோழி வளர்ப்பிலும் ஆடு வளர்ப்பிலும் இறங்கி அதன் பலனாக 300க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் கருங்கோழி வனராஜா கிரிராஜா போன்ற உயர்ரக கோழிகள் இவரது ஒருங்கிணைந்த பண்ணையில் வளர்க்கப்படுகிறது. மேலும் தலைச்சேரி போயர்  போன்ற ரகங்களில் 100 ஆடுகளையும் வளர்த்து வருகிறார். மேலும் இந்த பண்ணையின் அருகாமையிலேயே ஒரு காய்கறி தோட்டம் ஒன்றும் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பண்ணை தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தை மற்ற விவசாயிகளும் உதாரணமாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என வேளாண் அதிகாரிகள் இந்த விவசாய பண்ணையத்தை அடையாளம் காட்டி வருகின்றனர்.




இதுகுறித்து இளம் விவசாயி கூறுகையில், நெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் செலவாகிறது. இதற்காக 6 மாதம் உழைக்க வேண்டி உள்ளது. ஆனால் லாபம் என்பது குறைந்த அளவே கிடைக்கிறது. ஆனால் மீன் பண்ணை ஒரு ஏக்கரில் அமைக்கும்போது 2000 மீன்குஞ்சுகள் இட்டு வளர்க்கமுடியும், 6 மாதத்தில் 2 டன் அளவுக்கு மீன் உற்பத்தி செய்ய முடியும், இதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால் 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். இது ஆண்டுக்கு 4 லட்சம் லாபத்தைத் தரும். இப்படி தான் என்னுடைய பண்ணை முதலில் செயல்படத் தொடங்கியது. தற்போது 5 ஏக்கராக எனது மீன் பண்ணை உயர்ந்துள்ளது. இதற்காக தீவன செலவைக் குறைக்க கோழி வளர்ப்பில் ஈடுபட்டு அதன் மூலம் மாதத்திற்கு முட்டை மற்றும் நாட்டு கோழி விற்பனை மூலம் ஆண்டுக்கு 75 ஆயிரம் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் 100 ஆடுகள் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் வருமானம் சராசரியாக வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி காய்கறி சாகுபடி மூலம் ஆண்டுக்கு 25 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். இந்த இளம் விவசாயி இந்த பணிகளை மேற்கொள்ள 7 விவசாய தொழிலாளர்களும் நிரந்தர வேலைவாய்ப்பை ஆண்டு முழுவதும் ஏற்படுத்தித் தரமுடிகிறது. இதுதவிர நெல் சாகுபடியும் செய்துவருகிறேன். முதலீடு செய்த முதல் ஒரு வருடத்திற்கு வருமானத்தை எதிர்பார்க்காமல் தனது உழைப்பை மட்டுமே ஈடாக கொடுத்தால் இரண்டாவது ஆண்டில் இருந்து இரட்டிப்பு வருமானம் விவசாயிகளுக்கு நிச்சயம் சாத்தியமாகும் என்கிறார்  இளம் சாதனை விவசாயி கணேஷ் கமலக்கண்ணன்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண