பாடையை வைத்து பெண்கள் ஒப்பாரி - சாலை இல்லாததால் சாலையை ஸ்தம்பிக்க வைத்த மக்கள்..!

தாரை தப்பட்டை முழங்க பாடை கட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அந்த பாடையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பேரளம் கடைவீதியில் பாடையினை சாலையில் வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளத்திலிருந்து அன்னியூர் தார் சாலை கடந்த 11 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் விபத்ததில் சிக்குவது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலரும் இந்த சாலையை கடக்கும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் சேதமடைந்துள்ள இந்த சாலையை முழுவதுமாக பெயர்த்து விட்டு உடனடியாக புதிய தார்சாலை அமைக்க வலியுறுத்தி அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரிடம் பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Continues below advertisement


ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்து வருகிறோம். ஆனால் சாலை இதுவரை அமைத்து தரவில்லை என வேதனையுடன் இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாரை தப்பட்டை முழங்க பாடை கட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அந்த பாடையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நெடுஞ்சாலையில்  உள்ள பேரளம் கடைவீதியில் ஊர்வலமாக எடுத்து வந்த பாடையினை சாலையில் வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். 


திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் பல கிராமங்களில் குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தி தரப்படாமல் உள்ளது இது சம்பந்தமாக ஒவ்வொரு வாரமும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர். அதற்கான நடவடிக்கையை அரசு அதிகாரிகள் உடனடியாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக புதிய சாலைகளை அமைத்து தர வேண்டும் இல்லையென்றால் நாள்தோறும் விபத்துகளின் எண்ணிக்கை தான் அதிகரித்து வரும் என வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்பதே அன்னியூர் கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement