திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.


திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவணிதம் காலனி தெருவில் வசித்து வருபவர்கள் கணபதி வயது 80, இந்திராணி வயது 70 இவர்கள் இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு அரசின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் கணபதியும் அவருடைய மனைவி இந்திராணியும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை முதல் கண்கொடுத்தவணிதம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் எப்பொழுதும் போல் கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த தம்பதியினர் இரவு உணவு உண்ட பின்பு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதிகாலை தொகுப்பு வீட்டில் மேற்கூரை முழுவதுமாக இடிந்து உறங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் மேலே விழுந்தது. உடனடியாக அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் இடர்பாடுகளில் சிக்கி இருந்த இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.




செல்லும் வழியில் கணபதி உயிரிழந்து விட்டார். அதனையடுத்து அவருடைய மனைவி இந்திராணி கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த கணபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


இதேபோன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வடவேர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அலமேலு வயது 70 இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் அலமேலு தனது கூரை வீட்டில் தனியாக படுத்து உறங்கிக் கொண்டிருந்த பொழுது நேற்று இரவு பெய்த கனமழையில் வீட்டில் பக்கவாட்டு சுவர் இடிந்து அவர் மேலே விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அலமேலு உயிரிழந்தார் உடனடியாக குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலமேலுவின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.




ஒரே நாளில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பல்வேறு இடங்களில் இடியும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்பொழுது வரை வசித்து வருகிறார்கள். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்து முன்கூட்டியே பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே இது போன்ற உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்க முடியும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கக்கூடிய நிலை உருவாகும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர். ஆகையால் தமிழக அரசு முன்கூட்டியே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தொகுப்பு வீடுகளை பராமரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.