திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் சிவராமகிருஷ்ணன் வயது 80 மற்றும் ராமலிங்கம் வயது 82. சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி இரண்டு மகன் ஒரு மகளும் ராமலிங்கத்திற்கு மனைவி மற்றும் இரண்டு மகன் இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது சிவராமகிருஷ்ணன் மன்னார்குடி அருகே உள்ள நாலாம்தெரு பகுதியிலும் ராமலிங்கம் மன்னார்குடி அருகில் உள்ள அசேஷம் பகுதியிலும் வசித்து வருகின்றனர்.

 

சிவராமகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் இருவரும் பால்ய வயதிலிருந்து இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் ஒரே நேரத்தில் மன்னார்குடி அருகே உள்ள பாமணியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அதேபோன்று ஒரே நாளில் இருவரும் பணி ஓய்வும் பெற்றுள்ளனர். அதே போன்று இவர்களது குடும்பமும் சேர்ந்து சுப நிகழ்சிகளில் பங்கு பெறுவது  சுற்றுலா செல்வது என அன்யோன்யமாக இருந்து வந்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது அருகருகே உள்ள அசேஷம் மற்றும் நாலாம்தெரு பகுதியில் வசித்து வந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ராமலிங்கத்தின் மனைவியும் மகனும் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது ராமலிங்கம் அவர்களிடம் எங்கு சென்று வருகிறீர்கள் என்று கேட்டபோது சிவராமகிருஷ்ணனின் இறப்பிற்கு சென்று வருவதாக கூறியவுடன் அதிர்ச்சியில் அந்த நிமிடமே ராமலிங்கம்  உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருக்கிறது.

 

பால்ய வயதில் நண்பர்களாகி பள்ளி, கல்லூரி ,வேலை என எதிலும் இணைபிரியாமல் உயிருக்கு உயிராக நண்பர்களாக வாழ்ந்து வந்தவர்கள் இறப்பிலும் இணைபிரியாமல் நண்பர் உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் சிவராமகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நட்பிற்கு இலக்கணமாக கூறப்படும் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போன்று இறப்பிலும் இணை பிரியாத இந்த நண்பர்களின் உயிரிழப்பு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.