கலைஞர் கோட்டம்

 

திருவாரூர் தேர் என்றால் பேரழகு எனப் பலரும் சொல்வர். அத்தகைய சிறப்பு வாய்ந்த தேர் 40 ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்தது. இதனை நவீன தொழில்நுட்பத்துடன் ஓட வைத்து வரலாறு படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இவருக்கு அதே திருவாரூரில் சிறப்பு சேர்க்கும் வகையில் தேர் போன்ற வடிவில் பிரம்மாண்ட கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி  மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள், அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், கலைஞர் அடைக்கப்பட்டிருந்த சிறை போன்ற கட்டமைப்புகள், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பும் வகையில் சிறிய திரை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

 

திறப்பு விழா

 

மேலும் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கலைஞர் கோட்டத்தை தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற பளிங்கு கற்களால் ஆன கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். முத்துவேலர் நூலகத்தை பீகார் மாநில துணை முதல் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு  தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்றார்.



 

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

 

வான்புகழ் வள்ளுவருக்கு தலைநகரில் கூட்டம் கண்ட கருணாநிதிக்கு திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஓடி வந்த பெண்ணே கேள் நீ தேடி வந்த கோழை உள்ள நாடு இது அல்ல என்று 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் போர்பரணி பாடி வந்தாரோ, அதே திருவாரூரில் கருணாநிதிக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது. அண்ணாவை கலைஞர் முதல் முதலாக சந்தித்தது இந்த திருவாரூர் தான். தலைவராக பிற்காலத்தில் மாணவர் அல்ல கருணாநிதி. தலைவராகவே பிறந்தவர் தான் நமது தலைவர். அதற்கு அடித்தளமாக அமைந்தது தான் இந்த திருவாரூர். மன்னர்கள் கூட தாங்கள் ஆடும் போது தான் கோட்டையும், கோட்டமும் கட்டுவார்கள். ஆனால் கருணாநிதி அவர்கள் மறைவுக்குப் பிறகு கோட்டம் இங்கே எழுப்பப்பட்டு இருக்கிறது இன்னமும் கருணாநிதி வாழ்கிறார். ஏன் ஆள்கிறார் என்பதனுடைய அடையாளமாக தான் இந்த கம்பீரத்தோடு இந்தக் கோட்டம் இங்கு அமைந்திருக்கிறது. எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு  அது திறக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரையில் எனது தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாகவே இதை நான் கருதுகிறேன். எனது தாயார் கருணாநிதியை திருமணம் செய்து கொண்டதும் இதே திருவாரூரில் தான். கருணாநிதியின் வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்கள். வெற்றி தோல்விகள். ஏற்ற, இறக்கங்கள் என்று எத்தனையோ ஏற்பட்டு இருந்தாலும் அத்தனையும் சிரித்த முகத்தோடு எதிர்கொண்ட எப்போதும் அதே கருணை உள்ளத்தோடு இருந்தவர் எனது தாயார் தயாளு அம்மாள்.

 

கலைஞர் கூட்டம் என்பது கலைஞரின் பன்முக பரிணாமங்களை சொல்லக்கூடிய கருவூலம் கலைஞரின் திரு உருவச்சிலை, முத்துவேலர் நூலகம், இரண்டு அரங்குகள், இரண்டு தியேட்டர்கள், பாளையங்கோட்டை சிறையில் இருப்பது போன்ற வடிவமைப்பு செல்பி பாயிண்ட் கலைஞரோடு படம் எடுத்துக் கொள்ளக் கூடிய வசதி என அனைத்தும் அடங்கியதாக இந்த கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தேர் அழகு என்பார்கள் அந்த திருவாரூர் தேர் கலைஞர் கோட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திராவிட கட்டிடக்கலையோடு நவீன வசதிகளை உள்ளடக்கி இது அமைக்கப்பட்டு இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு கருணாநிதி மறைந்த போது நானும் எனது சகோதரி செல்வியும் இந்த நிலத்தை விலக்கி வாங்கினோம்.அதற்கு பிறகு இந்த நிலத்தில் ஒரு அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் கோட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என முடிவு செய்து நான்கு ஆண்டு காலமாக அதற்காக சிரமங்களை ஏற்றுக் கொண்டு இதை கட்டி முடித்து இருக்கிறார்கள். இதனை கட்டி முடிப்பதிலே தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு ஆலோசனைகள் வழங்கிய அமைச்சர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பார்த்து பார்த்து சிரிக்கிறதைப் போல இந்த கலைஞர் கோட்டத்தை வடிவமைத்து மேற்பார்வையிட்டு உள்ளார் வேலு. அவருக்கு எத்தனை பாராட்டுக்கள் சொன்னாலும் தகும். கருணாநிதி தமிழுக்காக போற்றப்பட்டார். தலைநகர் சென்னை முதல் கடை மடை வரை குமரி வரை தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் திட்டங்கள் சேவைகள் சாதனைகள் செய்தவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என வாழ்ந்த புறமாற்றுப் புலவர் அவர். ஆனாலும், அவரிடம் உங்களுக்கு பிடித்த ஊர் என்ன என்று கேட்டபோது நான் பிறந்த திருக்குவளை தான் என்று அவர் சொல்வார். தான் வாழ்ந்த இல்லத்தில் அன்னை அஞ்சுகம் பெயரில் படிப்பகம் தந்தை முத்துவேலர் பெயரில் நூலகம் அமைத்தார். பள்ளியின் மேல் படிப்பு படிக்க திருவாரூருக்கு வந்தார் கருணாநிதி. அதன் பிறகு திருவாரூரிலேயே அவர் கருவாக. திருவாககாரணமாக ஆகிய ஓர் திருவாரூர். கலைஞரை நாடு போற்றும் தலைவராக்கியவோர் இந்த திருவாரூர். குளித்தலை, தஞ்சை, சைதாப்பேட்டை, அண்ணா நகர், துறைமுகம், சேப்பாக்கம் என எத்தனை தொகுதிகளில் கலைஞர் போட்டியிட்டு இருந்தாலும் இறுதியாக வந்து நின்ற இடம் இந்த திருவாரூர். தேர் எப்போதும் புறப்பட்ட  இடத்திற்கே வந்து நிலை கொள்ளும் என்பதைப் போல கருணாநிதி பயணம் இருந்தது. அதனால் தான் திருவாரூரில் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது.



 

இது திருவாரூர் காரர்களுக்கு மட்டுமல்ல இந்த டெல்டா மாவட்டங்களுக்கே மிக சிறந்த பிரமாண்டமான திருமண மற்றும் விழாக்கள் நடத்துவதற்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்டி எழுப்பியது போல கவனமாக இதனை அழகு குறையாமல் பாதுகாக்க வேண்டும்.  அரங்கம் அமைப்பது கூட அதனை பராமரிப்பு தான் சிரமம். எனது கால்கள் கடை கோடியில் நிற்கும் மக்களை சுற்றியே உலா வருகின்றன. எனது கரங்கள் அவர்களை கரையேற்றி விடவே நீள்கின்றன. எனது கண்கள் அவர்களுக்காகவே ஒளி உமிழ் இருக்கின்றன என்று சொன்னவர் கருணாநிதி. மறைவுற்ற வாழ்க்கைக்கு பிறகும் மருத்துவமனையாக நூலகமாக இதுபோன்ற கூட்டமாக பயன் அளித்து கொண்டிருக்கக் கூடியவர் தான் கருணாநிதி. இன்று நான் நடத்தும் கலைஞர் தலைமையிலான அரசை தான் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியை நான் கலைஞருக்கு காணிக்கையாக செலுத்திக் கொண்டிருக்கிறேன். எந்த சம்பவம் நடந்தாலும் தலைவர் இருந்தால் என்ன முடிவு எடுப்பார் என்று யோசித்து அந்த முடிவையே நான் எடுக்கிறேன். அதனால் தான் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். எனது உயரம் எனக்கு தெரியும் என்று சொல்லிக் கொள்வாரே தவிர இந்தியாவின் ஜனநாயகம் எப்போது எல்லாம் நெருக்கடிக்கு ஆளாகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவின் தலைவராக தனது எல்லையை விரித்தவர் தான் கருணாநிதி. கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் வர இயலவில்லை. எனவே இந்த அளவில் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் வர முடியாமல் போனது குறித்து தெரிவித்தார். ஆனால் அவர் நிகழ்த்துவதாக இருந்த இந்த உரையை தமிழாக்கம் செய்து திருச்சி சிவா இங்கு எடுத்து வாசித்து இருக்கிறார். அந்த உரை மிக சிறப்பாக இருந்தது.

 

பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சருக்கு நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஆகஸ்ட் 15 விடுதலை நாள் அன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்ற வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிமை பெற்று தந்தவர் கருணாநிதி. அதேபோல இந்திய அரசின் 1979 முதல் அனைத்து அரசியலமைப்பு ஒரு மாற்றங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி தான். இந்திரா காந்தி அம்மையார் தொடங்கி அத்தனை இந்திய பிரதமர்களிடம் நல்லுறவு வைத்திருந்தவர் கருணாநிதி. ஆட்சி மாற்றத்திற்கும் பிரதமர்களை உருவாக்குவதற்கும் கலைஞரின் பங்கு பெரும் பங்காக இருந்திருக்கிறது. அவரால் உருவாக்கப்பட்ட குடியரசுத் தலைவர்கள் அதிகம். கலைஞர் குடியிருந்த கோபாலபுரம் இல்லத்திற்கு பிரதமர்களும் அகில இந்திய அரசியல் தலைவர்களும் மற்ற மாநில முதலமைச்சர்களும் அதிகமாக வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய அரசியலில் மாபெரும் முழுமையாக இருந்தவர் கருணாநிதி.

 

இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய பொறுப்பை ஏற்று அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கி இருக்கிறது. 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு சர்வாதிகாரம் என்பது காட்டு என்று கூறியவர் கருணாநிதி. பாஜக கடந்த பத்தாண்டு காலமாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத்தீய அணைக்க வேண்டிய கடமை நமக்கு எல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை நிதிஷ்குமார் தொடங்கி வைக்கிறார். நானும் பாட்னா செல்கிறேன் உங்கள் அன்போடு செல்கிறேன் உங்கள் நம்பிக்கையோடு செல்கிறேன் ஜனநாயக போர்க்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கு எடுக்கிறேன். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் 3000 ஆண்டு 4000 ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும், இன்னும் சொல்கிறேன் கருணாநிதியின் உடைய  பிள்ளைகள் நாம் இதை செய்யாவிட்டால் வேறு யாராலும் இதை செய்ய முடியாது. மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழினத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் இந்தியாவின் எதிர்காலத்திற்கும் அது கேடாக போய் முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒரு முகமாக இருந்து செயல்படுகிறோமோ செயல்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும். வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். நாம் அதன் முன்னோட்டமாக தான் பீகார் மாநிலத்தில் நடைபெறும் கூட்டம் அமைய இருக்கிறது. நாம் ஒரு தாய் மக்கள் அந்த உணர்வோடு பணியாற்றி கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம். கருணாநிதிக்கு நான் மட்டும் மகன் அல்ல நீங்கள் அனைவரும் கருணாநிதி உடைய பிள்ளைகள், கொள்கைவாதிகள், கொள்கை வாரிசுகள் தான் அடக்குமுறை ஆளுமைக்கு எதிராக திராவிடத்தின் வாரிசுகளான நாம் இந்தியா முழுமைக்கும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம் 40-ம் நமதே நாடும் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

 

முன்னதாக  வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.